முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
பல் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்! பெங்களூருவில் 7 கி.மீ. நடந்து அலைந்தார்
By DIN | Published On : 19th April 2020 04:39 PM | Last Updated : 19th April 2020 05:47 PM | அ+அ அ- |

டாக்டர் ரம்யா
பெங்களூருவில் மருத்துவமனையைத்தேடி 7 கிலோ மீட்டர் நடந்தே வந்த பெண்ணுக்கு ஒரு பல் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
கரோனா கால ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அனைத்தும் மூடிக் கிடக்கின்றன.
இந்த நிலையில், நிறைமாதக் கர்ப்பிணியான 18-லிருந்து 20 வயதுக்குள் இருக்கக் கூடிய ஒரு பெண், பேறுகாலம் நெருங்கிவிட்ட நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி, அவருடைய கணவருடன் நடந்தே பெங்களூரு நோக்கி மருத்துவமனையைத் தேடிக்கொண்டு சென்றுள்ளார்.
மருத்துவமனை எதுவும் காணப்படாதநிலையில் பல் மருத்துவரான டாக்டர் ரம்யாவின் மருத்துவமனையில் அவர் அடைக்கலம் புகுந்தார்.
மணிக்கணக்காக நடந்து வந்ததில் மிகவும் அயர்ந்துவிட்ட அந்தப் பெண், பல் மருத்துவமனைக்கு வந்த 5-10 நிமிஷங்களில் குறைப்பிரசவமாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார் என்று கூறுகிறார் டாக்டர் ரம்யா.
"குழந்தை பிறந்ததுமே தொடக்கத்தில் குழந்தை இறந்துவிட்டதாகவே நாங்கள் நினைத்தோம். உள்ளே அதிக ரத்தப்போக்கு காரணமாக மோசமாக இருந்த தாய்க்குச் சிகிச்சையளிப்பதில்தான் கவனம் செலுத்தினோம். என்றாலும் பின்னர் சில சிகிச்சைகளின் மூலம் குழந்தையையும் காப்பாற்றிவிட்டோம்" என்றார் ரம்யா.
பின்னர், தாயும் குழந்தையும் கே.சி. அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இப்போது இருவரும் நலமாக இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார் ரம்யா.