மீண்டும் மரியாதையை மீட்பாரா பாரதிராஜா?

மீண்டும் ஒரு மரியாதை என முயன்று தோற்றுப் போகலாமா இயக்குநர் பாரதிராஜா? பாரதிராஜா தோற்பதைப் பார்க்க முடியுமா?
மீண்டும் மரியாதையை மீட்பாரா பாரதிராஜா?

பாரதிராஜா என்கிற பெயர் தமிழ்த் திரைப்படவுலத்திற்கு ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்த பெயர்.

பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகுதான் தமிழ்த் திரைப்படவுலகம், ஸ்டுடியோக்களை நம்பி கிராமங்களையும் அலுவலகங்களையும் வீடுகளையும் படமாக்கும் பழக்கத்தை விட்டு ஒதுங்கி, நிஜ கிராமம், நிஜ வீடுகளில், நிஜ அலுவலகங்களில் படமெடுக்கும் பழக்கம்  நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது என்று கூறப்படுவதுண்டு.

அப்படித்தான் அவரது திரைப்படம் நிஜ கிராமங்களை, நிஜ கதாநாயகிகளை, நிஜ வில்லன்களை, நிஜ அம்மாக்களை, நிஜ வயல்வெளிகளை, நிஜ கதாநாயகர்களை அனைவருக்கும் நிஜப்படுத்தியது.

அதுவரையிலும் தமிழ்த் திரைப்படவுலகில் மேக்கப் பூசிய அழகான கதாநாயகிகள், அழகான நாயகர்கள் என்பதை மாற்றி மேக்கப் இல்லாத நிஜ சொரூப கருப்பு நிற இன்ன பிற பெண் தகுதி மட்டும் கொண்ட நாயகிகள், பொருத்தமே இல்லாத பக்கத்து வீடுகளில் வாழ்பவர்களைக்  கதாநாயகனாக திரைக்குள் கொண்டு வந்து வெற்றி பெற்றவர் பாரதிராஜா.

இப்படித்தான் அழகான கமல்ஹாசனை கோவணம் கட்டி பச்சோந்தியை அடிக்க விட்டும், செருப்பு அணியாமல் மேக்கப் பூசாத சிவாஜிகணேசனை உலாவ விட்டு நிஜ நாயகர்களை நம்முன் கொண்டு வந்து நிறுத்தி வெற்றி பெற்றவர். அதனாலேயே அவர் செய்த அனைத்துத் தவறுகளையும் தமிழ் உலகம் பொறுத்து வந்தது.

தவறுகள் என்றால் அவர் கதாநாயகனாக நடித்தது. தனது உண்மை கதாவுலகம் மறந்து ஜிகினா காதல், ஜிகினா பாடல், ஜிகினா சண்டைகளெனத் தனது மகன் மனோஜை நாயகனாக்க செய்த மாபெரும் - தெரிந்தே செய்த - தவறைத் தமிழ் ரசிகர்கள் போகட்டும் விடு எனத் தெரிந்தே மன்னித்தார்கள். அதனை பாரதிராஜாவும் புரிந்து கொண்டார் என்றே தோன்றியது. அவரது 1977 16 வயதினிலே தொடங்கி 2013 அன்னக்கொடி வரையிலான இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்கள் ரசிக்கத் தகுந்தவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ஏதேனும் ஒரு கவரும் அம்சத்துடன் அவர் தன்னை நிரூபித்துக் காட்டியிருப்பார்.

வாலிபமே வா வா என்கிற வக்கிரமான அவருடைய திரைப்படத்தில்கூட அவரது தீவிர கலா அம்சம் வெளிப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் படத்தை அவரது ரசிகர்கள்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. பாடல்கள் ரசிக்கத்தக்க வகையில் இருந்த போதிலும் அவரது வக்கிரமான ஆண்மை என்கிற போதனையைத் பொதுத் தமிழ் ரசிகர்களும், பாரதிராஜாவின் ரசிகர்களும்கூட ரசிக்கவில்லை என்பதே உண்மை.

பாரதிராஜா தான் கதாநாயகனாக நடித்துவிட வேண்டும் என்கிற பேராசையை அவர் தனது இயக்குநர் காலத்திலேயே சாத்தியப்படுத்த முனைந்திருக்கிறார். அவரது ஆரம்ப காலப் படமான கல்லுக்குள் ஈரத்தில் இயக்குநராகவே வலம் வந்திருப்பார். ஒருவித ஆரம்ப கலையம்சம் மிச்சமிருந்ததில் அந்த படம் தலை தப்பியது. படத்தின் இளையராஜாவின் புத்துணர்வுப் பாடல்களும் புதுவித கதையம்சமும் அவரது கதாநாயக தோற்றத்தை மன்னித்து விடச் செய்தன.

ஆனால், தற்போது சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகத் தன்னை நிரூபித்துக் காட்டியிருப்பது அவரை இயக்கும் இயக்குநர்களைப் பொருத்து அமைந்து வருகிறது.

மணிரத்தினத்தின் ஆய்த எழுத்தில் ஓர் அரசியல்வாதியாகக் கச்சிதமாக நடித்திருப்பார். பின்னர் சுசீந்தரனின் பாண்டியநாடு படத்தில் ஒரு தந்தையாக அவர் மிகவும் பிரமாதமாகவே தன்னை வெளிப்படுத்தியிருந்தார். அதைப் போலவே கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகராகத் தன்னை நிலை நிறுத்தியிருந்தார்.

இருந்தபோதிலும் அவருக்குள் அகலாத நெருப்பாக கனன்றுகொண்டிருந்த கதநாயக தபசுக் கோலம் விட்டபாடில்லை என்றே தோன்றுகிறது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கம், அவரது தயாரிப்பு என்று நீண்டு அவரது நடிப்பில் வெளி வந்திருக்கிறது மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம்.

கிராமங்களைப் படம் பிடித்த உங்கள் பாரதிராஜா நாடு விட்டு லண்டன் நாட்டிற்கு வந்து உங்களுக்காக கதை சொல்ல வந்துள்ளேன் என்கிற அறிமுக விளக்கவுரையுடன் வெளிநாட்டில் தன்னைக் கால் பதிக்கவிட்டுள்ளார்.

ஆனால் இந்தத் திரைப்படம் ஓம் என்று பதிவு செய்யப்பட்டு பின்னர் படம் வெளியீட்டின்போது படத்தலைப்பு மாற்றப்பட்டு மீண்டும் ஒரு மரியாதையானது. இந்தப் படத்தையும் தமிழ் கூறும் நல்லுலகமும், பாரதிராஜாவின் பெயர் கூறும் ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. கிராமத்திலேயே நிகழ்த்தியிருக்க சாத்தியமுள்ள ஒரு கதையை அவர் எதற்காக வெளிநாட்டுக்குச் சென்றார் என்கிற கேள்வியுடனே படம் முழுவதும் பார்க்க வேண்டியதாக உள்ளது.

மீண்டும் ஒரு மரியாதையைப் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவனும்,  படத் தொகுப்பாளர் பழனிவேலும் தங்களால் முடிந்தவரை இது பாரதிராஜா படம்தான் என்பதைப் பாடல் காட்சிகளிலும், வழக்கமான பாரதிராஜாவின் சில கவித்துவ காட்சிகளிலும் வெளிப்படுத்தியும்  அடையாளப்படுத்திடவும் தொடர்ந்து முயன்று அதனை ஓரளவு நிறைவேற்றியும் காட்டியுள்ளனர். ஆனால் அவர்களால் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்தி விட முடியவில்லை.

ராட்சச நடிப்புத்தன்மை கொண்ட சிவாஜி கணேசனைத் தனது முதல் மரியாதையில் படம் முழுவதும் சும்மா வந்து போங்க என்று கூறிய அதே பாரதிராஜா, தான் நாயகனாக நடித்துள்ள மீண்டும் ஒரு மரியாதையில் படம் முழுவதும் கஷ்டப்பட்டு நடிக்கவும், தன்னை வயதானவராகக் காட்ட கூனுடன் குனிந்தும் குச்சியுடனும் (அந்தக் குச்சியை படம் முழுவதும் ஒருமுறைகூட ஊன்றி நடக்கவில்லை பாரதிராஜா) நடிக்க முயன்றுள்ளார்.

அவர் எழுத்தாளர் என்பதால் தான் எழுதிய புத்தகத்தையே படம் முழுவதும் அவர் படித்துக் கொண்டிருப்பது அபத்தமானதாகவும், நாடகத்தனமாகவும் இருக்கிறது. பல இடங்களில் மேக்கப் பூசியிருப்பாரோ என்கிற பதற்றம் நமக்குள் தோன்றாமலில்லை, அந்தளவு முகநெருக்கக் காட்சியில் பாதி முகம் வெள்ளையடித்துக் காணப்படுகிறது.

மிகவும் இயல்பான பாரதிராஜாவைப் படத்தில் எங்கும் பார்க்க முடியாமல், வெற்றி பெற்று விடுவோமா படம் தப்பி விடுமா என்கிற பயத்திலேயே நடித்தது மாதிரி அவர் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. நமது பாரதிராஜா திரைக்குப் பின்னால் நின்று ஒருவரிடம் வேலை வாங்கிக் காட்டி வெற்றி பெற வேண்டுமென்றுதான் நினைக்கத் தோன்றுகிறதே தவிர அவர் இதுபோல் நடித்து தன்னை வெளிப்படுத்தி தோல்வியடையக் கூடாது.

ஒரு தகுதியுள்ள கலைஞன், தரமான கலைஞன் இதுபோல் தோல்வியடைவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  தவிரவும் அவர் பிற இயக்குநர்கள் திரைப்படங்களில் நடிப்பதுதான் சிறப்பு என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார் பாரதிராஜா.

தமிழ்த் திரைப்படவுலகின் திசைகளை மாற்றியமைத்து இந்தியாவின் புகழ்ப் பரப்பில் தமிழ்த் திரைப்படங்களைப் பதியவிட்டு மரியாதை செலுத்திய பாரதிராஜா இதுபோன்ற திரைப்படங்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று கருதும் பொதுத் தன்மையை நிலவ விட்டிருக்கக் கூடாது.

அவர் வெற்றி பெற்ற இயக்குநராகவே இருந்து விடவே ஆசைப்படுகிறது தமிழ்த் திரைப்படவுலகம். மீண்டும் ஒரு மரியாதை போன்ற முயற்சியைக் கைவிட்டுப் பிற நடிகர்களை நடிக்க வைத்து மீண்டும் முதல் மரியாதையைப் போன்ற திரைப்படங்களை அவர் முயன்று தமிழ்த் திரைப்படவுலத்தில் உலா வரும் இளைய இயக்குநர்களிடையே தானும் ஒரு காலத்தை வென்ற இயக்குநர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com