ம.பி.யிலுள்ள மாணவர்களை அழைத்துவரக் கோரி காரைக்காலில் பெற்றோர்கள் தர்னா
By DIN | Published On : 27th April 2020 04:49 PM | Last Updated : 27th April 2020 04:49 PM | அ+அ அ- |

காரைக்கால் : மத்திய பிரதேச நவோதயா பள்ளியில் தங்கியுள்ள காரைக்கால் மாணவர்களை அழைத்து வர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள், காரைக்காலில் நவோதயா பள்ளி முன் திங்கள்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர்.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 17 மாணவ, மாணவிகள், மாநிலங்களிடையே உள்ள மாணவர்கள் கல்வி கற்றல் பரிமாற்றத் திட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தின் நவோதயா பள்ளியில் 9-ஆம் வகுப்பை கடந்த ஓராண்டாக படித்து வருகின்றனர். இவ்வாறு வேறு மாநிலத்திலிருந்து காரைக்கால் நவோதயா பள்ளியில் படித்தவர்கள், ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பே சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ம.பி. பள்ளியில் கல்விக் காலம் முடியும் தருணத்தில், கரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு அமலானதால் அம்மாணவர்கள் சொந்த ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் தங்களது குழந்தைகளை காரைக்காலுக்கு அழைத்துவந்து ஒப்படைக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தங்களது குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்றுக்கூட தெரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோரை சந்தித்து தங்களது வேதனையை தெரிவித்தனர்.
மேலும் விடியோ கான்பரசின்ங் முறையில் குழந்தைகளோடு பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்கள் அரசை வலியுறுத்துகின்றனர். ஆனால் இதுவரை இதுதொடர்பாக உறுததியாக எந்தவித நடவடிக்கையும் புதுச்சேரி அரசு எடுக்கவில்லை.
வரும் மே 3ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்தால் அடுத்த சில நாள்களில் குழந்தைகள் ஊருக்கு திரும்பலாம். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், குழந்தைகள் வரத்து மேலும் தாமதமாகும் என அச்சமடைந்த பெற்றோர்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகே ராயன்பாளையத்தில் உள்ள நவோதயா வித்யாலயாவின் முன்பு திங்கள்கிழமை திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ரகுநாயகம், ஆய்வாளர் லெனின்பாரதி மற்றும் போலீஸôர் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் பேச்சு நடத்தினர்.
அப்போது தங்களது குழந்தைகளை மீட்டு வர நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து, போராட்டத்தை தொடர்ந்தனர்.
பின்னர் ஒரு சில பெற்றோர்களை மட்டும் ஆட்சியர் அர்ஜுன் சர்மாவை சந்திக்கக் காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். இப்பிரச்னையை உடனடியாக புதுச்சேரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, அந்த மாநில முதல்வருடன் பேசி, மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். இதனை ஏற்று பெற்றோர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்துசென்றனர்.