சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா ரத்து
By எஸ்.தங்கவேல் | Published On : 27th April 2020 06:38 PM | Last Updated : 27th April 2020 06:55 PM | அ+அ அ- |

பெரிய தேரில் அமர்ந்து பவனி வரும் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சவ மூர்த்தி சுவாமிகள் (கோப்பு படம்).
சங்ககிரி: கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரை தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் இன்று (திங்கள்கிழமை) தெரிவித்துள்ளார்.
சித்திரை தேர்த்திருவிழாவில் சிறிய தேரில் பவனி வரும் அருள்மிகு ஆஞ்சநேயர் (கோப்பு படம்)
சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரை திருவிழா வழக்கம் போல் ஏப்ரல் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுவாமி மலையிலிருந்து நகருக்குள் எழுந்தருள வேண்டும். அன்றிரவு முதல் நாள் அன்னபட்சி வாகனத்திலும், 2ஆம் நாள் சிங்க வாகனத்திலும், 3ஆம் நாள் அனுமந்தன் வாகனத்திலும், 4ஆம் நாள் கருட வாகனத்திலும், 5ஆம் நாள் சேஷ வாகனத்திலும், 6ஆம் நாள் யானைவாகனத்திலும், 7ஆம் நாள் திருக்கல்யாண உற்சவமும் மற்றும் புஷ்ப வாகனத்திலும், 8ஆம் நாள் குதிரை உள்ளிட்ட வாகனத்தில் சுவாமி மாலை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வருதல் நிகழ்ச்சிகளும், 9ஆம் நாள் மே 6ஆம் தேதி அருள்மிகு ஆஞ்நேயர் சுவாமி அமர்ந்து செல்லும் சிறிய தேரும், அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் அமர்ந்து செல்லும் பெரியதேர் வடம் பிடித்தலும் நடைபெற வேண்டும்.
பக்தர்களால் வடம் பிடித்து இழுத்து செல்லப்படும் பெரிய தேர் (கோப்பு படம்)
இதனையடுத்து பல்வேறு கட்டளை வழிபாட்டிற்குப் பின்னர் சுவாமி மே 16ஆம் தேதி மலைக்கு எழுந்தருதல் நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கஸ்தூரியிடம் கேட்ட போது தற்போது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமலில் உள்ளதால் பொதுமக்கள் கூடும் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
அருள்மிகு சென்னகேவசப் பெருமாள் கோயில் சித்திரை தேர்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை நட்சத்திரம் அன்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.