பிப்ரவரியில் சென்னைப் புத்தகக் காட்சி?
By DIN | Published On : 10th December 2020 03:17 PM | Last Updated : 10th December 2020 03:17 PM | அ+அ அ- |

பிப்ரவரியில் சென்னைப் புத்தகக் காட்சி?
சென்னைப் புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) ஆண்டுதோறும் பிரமாண்டமான வகையில் புத்தக விற்பனைக் கண்காட்சியை நடத்திவருகிறது.
வழக்கமாக ஜனவரி மாதத்தில் பொங்கல் விழா விடுமுறை நாள்களை உள்ளடக்கிய காலகட்டத்தில் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கி, பிற தொழில்களைப் போலவே பதிப்புத் துறையுடன் சேர்ந்து புத்தக விற்பனையும் முற்றிலுமாக முடங்கிவிட்டது.
பதிப்புத் துறை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் வரும் ஜனவரியில் வழக்கம்போல சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறுமா, புதிய புத்தகங்கள் வெளிவருமா என்றெல்லாம் அச்சம் நிலவிவந்தது.
தவிர, புத்தகக் காட்சி போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாகத் திரள அனுமதிக்கப்படுவார்களா என்றெல்லாமும் சந்தேகம் நிலவிவருகிறது.
எனினும், வழக்கமான போக்குவரத்துகள் அனுமதிக்கப்பட்டு, கடற்கரையெல்லாம் திறந்துவிடப்படவுள்ள நிலையில் புத்தகக் காட்சிக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக நடைபெற்ற பபாசி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், 2021 - சென்னை புத்தகக் காட்சியை ஜனவரி மாதத்துக்குப் பதிலாக பிப்ரவரியில் நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சி பற்றிக் கேட்டபோது, பெரும்பாலான பதிப்பாளர்கள் புத்தகக் காட்சி நடத்துவது பற்றி வலியுறுத்தி வருவதாகவும் எனவே, தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள பபாசி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) தலைவர் ஆர்.எஸ். சண்முகம் தெரிவித்தார்.
முறைப்படி அரசின் அனுமதியைப் பெற்று, பிப்ரவரி மாதத்தில் சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார் ஆர்.எஸ். சண்முகம்.