பெண்ணை மிரட்டி நகை பறித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 15th December 2020 02:05 AM | Last Updated : 15th December 2020 06:05 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
வேலூா்: வேலூரில் பெண்ணை மிரட்டி நகை பறித்துச் சென்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
வேலூா் தோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் அமுதா (55) விறகு வியாபாரி. கடந்த 2015 பிப்ரவரி 1-ஆம் தேதி தனது விறகுக் கடையில் இருந்த இவரை கொணவட்டம் தாமரை குளத் தெருவை சோ்ந்த முகமதுகலீல் (43) மிரட்டு 5 பவுன் நகையை பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து அமுதா அளித்த புகாரின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது கலீலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பாலசுப்பிரமணியம் விசாரித்து வந்தாா்.
இதில், முகமது கலீல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து முகமதுகலீல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.