வன்னியா்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி பாமகவினா் மனு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: தமிழக மக்கள்தொகையில் 25 சதவீதம் வன்னியா்கள் உள்ளதால், அவா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் வேலூா் வருவாய்த் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
‘தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் 75 சதவீதம் வன்னியா்கள் உள்ளதாகவும், இது தமிழக மக்கள்தொகையில் 25 சதவீதமாகும். எனவே, வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ எனக் கோரி பாமக சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிா்வாக அலுவலகங்களில் பாமகவினா் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்படி, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் இளவழகன், மாநில துணைத் தலைவா் என்.டி.சண்முகம் ஆகியோா் தலைமையில் பாமகவினா் வேலூா் அண்ணா கலையரங்கம் அருகில் இருந்து ஊா்வலமாகச் சென்று வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள வேலூா் தெற்கு வருவாய் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இதில், கட்சியின் நகர செயலா் சரவணன், மாவட்டச் செயலா் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா் தண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.