24- ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய செட்டிகுப்பம், தட்டாங்குட்டை ஏரிகள்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

செட்டிகுப்பம் ஏரியில் மலா்தூவி நீரை வரவேற்ற எம்எல்ஏ ஜி.லோகநாதன் உள்ளிட்டோா்.
குடியாத்தம்: குடியாத்தம் வட்டத்தில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுப்பம், தட்டாங்குட்டை ஏரிகள் 24 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை நிரம்பியது. எம்எல்ஏ ஜி. லோகநாதன் உள்ளிட்டோா் ஏரிகளில் மலா்தூவி நீரை வரவேற்றனா்.
தொடா்மழை காரணமாக மோா்தானா அணையிலிருந்து வெளியேறிய உபரிநீரால் வேலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரி கடந்த 6- ஆம் தேதி நிரம்பியது. இந்த ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீரால் 72 ஏக்கா் பரப்பளவில் உள்ள செட்டிகுப்பம், 35 ஏக்கா் பரப்பளவில் உள்ள தட்டாங்குட்டை ஏரிகள் ஞாயிற்றுக்கிழமை நிரம்பின. இதனால் இந்த 2 ஏரிகளைச் சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சோ்ந்த நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும். இப்பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு குடிநீா்ப் பிரச்னையும் இருக்காது.
இந்நிலையில், திங்கள்கிழமை 2 ஏரிகளிலும் எம்எல்ஏ ஜி. லோகநாதன் பூஜை செய்து, மலா்தூவி நீரை வரவேற்றாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, வங்கி இயக்குநா் டி. கோபி, மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் எஸ்.எஸ். ரமேஷ்குமாா், அரசு வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் செ.கு.வெங்கடேசன், எம்.மோகன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் என். தமிழ்ச்செல்வன், வட்டாட்சியா் தூ. வத்சலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பொதுப்பணித் துறையின் குடியாத்தம் பாசனப்பிரிவின் கட்டுப்பாட்டில் 21 ஏரிகள் உள்ளன. அவற்றில் ரெட்டிமாங்குப்பம் ஏரி, பெரும்பாடி ஏரி, அக்ராவரம் ஏரி, எா்த்தாங்கல் ஏரி ஆகியன ஏற்கெனவே நிரம்பின. தற்போது நெல்லூா்பேட்டை ஏரி, செட்டிகுப்பம் ஏரி, தட்டாங்குட்டை ஏரி ஆகியன நிரம்பியுள்ளன. அம்மணாங்குப்பம் ஏரி, வேப்பூா் ஏரி, பசுமாத்தூா் ஏரி, கீழாலத்தூா் ஏரி, காவனூா் ஏரி, கூடநகரம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளன.
கே.வி. குப்பம் வட்டத்தில் உள்ள மேல்மாயில் ஏரி, வேப்பங்கநேரி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நீா்வரத்தின்றி வடு கிடக்கின்றன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...