எட்டயபுரம் பள்ளும் பாரம்பரிய நெல் வகைகளும்

ஒருகாலத்தில் தமிழகத்தில் எட்டயபுர சமஸ்தானத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தது என்பதை, ‘எட்டயபுரம் பள்ளு’ பாடலில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
எட்டயபுரம் அரண்மனை
எட்டயபுரம் அரண்மனை

பசுமைப் புரட்சி என்றழைக்கப்பட்ட, ரசாயன உரங்களை நம்பிய புதிய அலை வேளாண் சாகுபடியின் தீவிரத்தாலும் அரச ஊக்குவிப்பாலும் நாடு முழுவதும் பாரம்பரியான பயிர் வகைகள் அழிந்துபட்டன.

தமிழகத்தில் காலங்காலமாகப் பயிரிடப்பட்டு வந்த நெல் வகைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமும்கூட இருந்திருக்கிறது.

ஆனால், காலவேகத்தில் தமிழகத்தில் தற்போது பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிடுவது அருகிவிட்டிருக்கிறது. எனினும், ஆங்காங்கே பாரம்பரிய ரகங்களைப் பாதுகாத்துப் பயிரிடத் தேவையான முயற்சிகளைத் தனிநபர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருகாலத்தில் தமிழகத்தில் எட்டயபுர சமஸ்தானத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தது என்பதை, ‘எட்டயபுரம் பள்ளு’ பாடலில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

எட்டயபுரம் பள்ளு

எட்டயபுரம் பள்ளு என்ற இந்த நூலைப்‌ பாடியவர்‌ நாகூர்‌ முத்துப்புலவா்‌ என்பவர். இப்புலவர்‌ சோழ நாட்டைச்‌ சேர்ந்த தஞ்சைக்கு அடுத்திருக்கும்‌ கடற்கரை நகரான நாகூர்‌ ஊரைச்‌ சேர்ந்தவர். இப்புலவர்‌ பாட்டுடைத்‌ தலைவன்‌ மீது மட்டும்‌ அல்லாது அவனது முன்னோரான “வேங்கடேசுர எட்டப்ப பூபதி' என்பார்‌ மீதும்‌ செய்யுள்கள்‌ பாடியுள்ளார்‌ என உ.வே. சாமிநாதையர்‌ கூறுவார் (அப்பாடல்கள்‌ சில பின்னிணைப்பில்‌ தரப்பட்டுள்ளன).

இப்புலவர்‌ எட்டயபுரம்‌ கடிகை முத்துப்‌ புலவர்‌ காலத்தவர்‌. இக்கடிகை முத்துப்‌ புலவர்‌ கி.பி. 1705 முதல்‌ கி.பி. 1725 வரை, ஆட்சி புரிந்து வந்த 'ஜெக வீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர்'‌ காலத்தவர்‌ என ஐயா குறிப்பின்‌ துணை கொண்டு அறிய முடிகிறது.

இப்புலவர்‌ குமார எட்டேந்திரன்‌ அவையில்‌ முதன்மைப்‌ புலவராக விளங்கினார்‌. நாகூர்‌ என்பது இன்றைய நாகப்பட்டினமாகும்‌. அன்னை வேளாங்‌கண்ணியின்‌ திருக்கோயிலும்‌ இசுலாமியர்‌ போற்றும்‌ புனித பள்ளிவாசலும்‌ பெற்று இன்று இவ்வூர்‌ஆன்மிகச்‌ சிறப்பு மிக்க ஊராக விளங்குகிறது.

நூல்‌ எழுந்த காலம்‌

கடிகை முத்துப்‌ புலவர். என்பவர்‌ எட்டையபுர சமஸ்தானத்தின்‌ அரசுப்‌ புலவராக விளங்கினார்‌ என்பதும்‌, ஜெக வீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர்‌ மீது, 'சமுத்திர விலாசம்‌”, காமரசமஞ்சரி போன்ற நூல்களைப்‌ பாடினார்‌ என்பதும்‌, இவர்‌ கி.பி. 1705-1725 உள்பட்ட மேற்சொன்ன மன்னர்‌ காலத்தவர்‌ என்பதும்‌ முன்பே கண்டோம்‌.

ஏட்டின்‌ முன்னோ அல்லது பின்னோ நூல்‌ எழுந்த காலத்தையோ அல்லது படி எடுத்த காலத்தையோ குறிப்பிடப்‌படாததால்‌, கலைக்களஞ்சியக்‌ குறிப்பின்‌ துணைகொண்டு இந்நூலின்‌ காலம்‌ கி.பி. 19 ஆம்‌ நூற்றாண்டு எனக்‌ கருதலாம்‌.

பூசாரியிடம்‌ அளித்ததாகவும்‌ (174) ராமவெங்கடாசல விட்ணு ஆலயத்திற்குச்‌ சம்பா நெல்‌ ஆயிரங்கோட்டை திருமலை அய்யங்கார்‌ வசம்‌ அளந்ததாகவும் ‌(175), சாத்தூர்‌ பெருமாள்‌ படித்தரப் பூசை, காலம்‌ தவறாமல்‌ நடைபெற அரசரின்‌ ஆணைப்படி ஆயிரங்கோட்டை நெல்லை, கஸ்தூரி வாணன்‌ பால்‌ அளந்ததாகவும்‌ (176), விண்ணோர்‌ போற்றும்‌ கழுகாசலக்‌ குகவேளுக்கு பூந்தாளைச்‌ சம்பா நெல்‌, அண்ணாப்பட்டர்‌ வசம்‌ ஆயிரங்கோட்டை அளந்ததாகவும் ‌(177), ஆதிவெயிலு வந்தாள்‌ அன்னை முப்பிடாரியலங்காரி கோயிற்கு ஐநூறு கோட்டை நெல்‌ பண்டாரத்திட்டம்‌ அளந்ததாகவும்‌ (178), மங்காத கீர்த்தி பெறு எட்டையபுரத்தங்காள்‌ நாயகிக்கென முன்னூறு கோட்டை நெல்லைப்‌ பூசாரி அங்கணன்‌ வசம்‌ அளந்ததாகவும்‌ (179), தவசித்தம்‌ பிரானுக்கு உரிய பூசைகள்‌ நடைபெற நல்கையாக சுப்பன்‌ பண்டாரம்‌ வசம்‌ ஆயிரங்‌கோட்டை ராசவெள்ளை நெல்‌ அளந்ததாகவும்‌ (180), கூலதெய்வமான சக்கதேவிக்கு ஆனைக்‌ கொம்பன்‌ நெல்‌ 
முன்னூற்றைந்து கோட்டை அளந்ததாகவும்‌ (182), காசிநகரதனில்‌ வாசம்‌ செய்யும்‌ விசுவேசருக்கு நித்திய பூசை நடைபெற ஆயிரங்கோட்டை நெல்‌ போசனச்‌ சம்பா அளந்ததாகவும்‌ (183), புனித நீராடுதலுக்குரிய தமிழகத்தின்‌ தலைசிறந்த தலமான தனுக்கோடி சிவராமலிங்கர்‌ ஆலய பூசைக்காக பிள்ளைச்‌ சம்பா ஆயிரங்கோட்டை நெல்‌ அளந்ததாகவும்‌ (184), இரத்தினகிரிக்‌ கோவிற்‌ கட்டளைக்கென எண்ணூறு கோட்டை மிளகி நெல்லை சிவாலயப்‌ பண்டாரத்திடம்‌ அளந்ததாகவும்‌ (185), மதுரையில்‌ எழுந்‌தருளியிருக்கும்‌ சொக்கர் மீனாட்சி ஆலயத்திற்கு குங்குமச்‌ சம்பா நெல்லில்‌ எண்ணூறு கோட்டை நெல்‌ மீனாட்சிநாத பட்டர்‌ வசம்‌ அளந்ததாகவும்‌ (186), தென்பாண்டி நாட்டில்‌ ஆழ்வார்திருநகரியில்‌ எழுந்தருளியுள்ள பெருமாள்‌ கட்டளைக்‌கென, பூந்தாழை நெல்லில்‌ நானூறு கோட்டையை நல்கையாக சேஷயங்கார்‌ வசம்‌ அளந்ததாகவும்‌ (187), நெல்லையில்‌ கோயில்‌ கொண்டுள்ள நெல்லை நாயகர்‌ உடன்‌ உறை காந்திமதி‌ கோயிலுக்குக்‌ கட்டளையாக ஆயிரங்கோட்டை புழுகுச்சம்பா நெல்லை வாடிக்கைப்படி அளந்ததாகவும்‌ (188), புனைவனச்‌ சங்கரேசுபவர்‌ கோயிலுக்கு நித்திய பூசை வேண்டியும்‌ அன்னதான நற்காரியத்திற்காகவும்‌ சம்பா நெல்லில்‌ அறுநூறு
கோட்டை அளந்ததாகவும்‌ (189), மங்கை யெனும்‌ கோவிற்‌ பட்டியில்‌ எழுந்தருளியுள்ள பூவண்ண நாதர்‌ பூசைக்கென்று சம்பா நெல்‌ முன்னூறு கோட்டை அளந்ததாகவும்‌ (190), கடல்‌ முத்தமிடும்‌ அறுபடை வீட்டில்‌ ஒன்றான திருச்செந்தூரில்‌ எழுந்தருளியிருக்கும்‌ சண்முகநாதர்‌ கட்டளைக்கென வெந்தயச்சம்பா நெல்லில்‌ எழுநூறு கோட்டை வேலன்‌ என்பாரிடம்‌ அளந்ததாகவும் ‌(191), வேதபாராயணம்‌ மற்றும்‌
சாத்திர, தோத்திரங்கள்‌ கற்றுத்தரும்‌ அந்தணர்களான தாத்தையங்கார்‌ வகையினருக்கு ஐநூறு கோட்டை நெல்‌ அளந்ததாகவும்‌ (192), வீடுபேற்றை நல்க வல்ல வேள்விகளைச்‌ செய்யவல்ல வேத விற்பன சுப்பிர தீட்சதருக்கு எழுநூற்றொரு கோட்டை சீரகச்சம்பா நெல்‌ அளந்ததாகவும்‌ (193), எட்டையபுர சமத்தான பரம்பரையைச்‌ சேர்ந்த கண்ணப்ப குருசாமிக்கென எண்ணூற்றஞ்சு கோட்டை நெல்‌ அளந்ததாகவும்‌ (194), நற்றமிழ்‌ காத்தும்‌ படிப்பித்தும்‌ ஆசானாகவும்‌ இருந்தும்‌ செயலாற்றும்‌ பன கடிகை நமச்சிவாயப்‌ புலவர்‌ பெருமகனார்க்கு அரசனின்‌ ஆணைப்படி முன்னூற்றைந்து கோட்டை நெல்‌ வழங்கியதாகவும்‌ (195), இன்னிசையில்‌ வல்லுனராக வீணை தனிற்‌ சிறந்து விளங்கும்‌ வெள்ளை அண்ணாவி குமாரர்க்கென்று வாழைப்பூச்‌ சம்பாவில்‌ தொண்ணூற்று ஐந்து கோட்டை நெல்‌ அளந்ததாகவும் ‌(196), குமார எட்ட பாண்டிய தெய்வேந்திர கன்னன்‌ பெயரை நாளும்‌ பாடும்‌ நற்றமிழ்ப்‌ புலவர்‌ நாகூர்‌ முத்துப்‌ புலவனுக்கு வளமை சேர்க்க முன்னூறு கோட்டை நெல்‌ அளந்ததாகவும் ‌(197), நீர்நிலைகளை உண்டாக்குபவரும்‌, அவ்வாறு உண்டாக்கிய குளம்‌, ஏரிகளைக்‌ காவற்‌ புரிவோருக்கும்‌, பசிப்பிணிப்‌ போக்க நீர்நிலை காக்கும்‌ ராக்கப்பன்‌ செட்டியார் வசம்‌ அரண்மனை நல்கையாக ஆயிரங்கோட்டை நெல்‌ அளந்ததாகவும்‌ (198), கனக சபாபதியா பிள்ளைக்‌ கணக்கின்‌படி முத்துப்பேயன்பால்‌ எண்ணாயிரம்‌ கோட்டை நெல்‌ பாட்டத்தில்‌ அளந்ததாகவும்‌ (199), உவணகிரி சுற்றித்‌ தேரோட்டி வைப்பதற்கு ஒன்பதினாயிரம்‌ கோட்டை நெல்‌ அளந்ததாகவும்‌ அந்நெல்லைக்‌ குமாரவேல் மணி என்பார்‌ பெற்றதாகவும்‌ (200), சம்பாதி என்ற இடத்தில்‌ உள்ள குமரகுருபரர்‌ சன்னதி சத்திரம்‌ நடக்கவென்று தொண்ணூற்றொரு கோட்டை நெல்‌ சுப்பன்‌ வசம்‌ அளந்ததாகவும்‌ (201) குறிப்புகள்‌ காணப்படுகின்றன.

இந்த வகையில்‌ எண்பத்தீராயிரத்‌ தெழுநூற்றொரு கோட்டை நெல்‌ நீக்கி சேரில்‌ வந்த நெல்‌ அளவு தொண்ணூற்றிரண்டு லச்சங்கோட்டை சொந்தத்திருப்பில்‌ உள்ளதாகவும்‌, ஒரு பாடல்‌ (202) கூறுகிறது. இவை அன்றிச்‌ சம்பிறுதிப்‌ பிள்ளை வயித்திலிங்கத் தயாள்‌ எழுதுங்‌ கைக்‌ கணக்கின்படி இன்னும்‌ அளக்கப்படாத நெற்கட்டுகள்‌ உள்ளதாகவும்‌ (209) இத்தனை நெல்லும்‌ உள்ளூர்‌ மணியம்‌ வெங்கடேசு ரெட்டுவேள்‌ முன்னிலையில்‌ அளந்து கணக்கிடப்‌பட்டது என்ற குறிப்பும்‌ (204) உள்ளது.

இவற்றை எல்லாம்‌ காணும்‌போது எட்டையபுர அரண்மனையின்‌ செல்வச்‌ செழிப்பையும்‌ நிருவாகச்‌ சிறப்பையும்‌ தரும சிந்தனையையும்‌ அறிந்து கொள்ளதக்க சான்றுகளென  அமையும்‌ அன்றோ.

இதுவரை கண்ட செய்திகளில்‌ இருந்து இந்த எட்டையபுரப்‌ பள்ளு அனைத்து வகையிலும்‌ சிறப்புற்று விளங்கும்‌ நல்‌ இலக்கியமாகவே திகழ்கிறது.

இதுவரை‌ தமிழகத்தில்‌ முக்கூடற்பள்ளுதான்‌ மக்களிடையே புலவர்களாலும் ‌ஆசிரியர்களாலும்‌ பெரிதும்‌ எடுத்துப் ‌பேசப்பட்டது. இன்று அச்சு நூலாகத்‌ தமிழன்னையின்‌ பாதத்தை அழகு செய்யும்‌ எட்டயபுரப் பள்ளு  [பதிப்பாசிரியர் த. பூமி நாகநாதன், வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்] என்ற இந்நூல்‌ முக்கூடற்‌ பள்ளுக்கு எந்த வகையிலும்‌ குறைந்ததல்ல.

தென்னிளசைச் (எட்டையபுரம்‌) சிறப்பு, அதனை ஆண்டு வந்த மாமன்னர்தம்‌ பெருமை, சமூகப்‌ பண்பாட்டுச்‌ செய்திகள்‌ ஆகியவற்றை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தும்‌ இந்நூலின்‌ சிறப்புப்‌ போற்றுதற்குரியது. அரசும்‌, தமிழ்‌ ஆர்வலர்களும்‌ இந்நூலை மக்களிடையே கொண்டு சென்றால்‌ இப்பள்ளின்‌ பெருமையை யாவரும்‌ அறிந்துபோற்ற ஏதுவாக அமையும்‌.

கலிப்பா

172. மேதினியோர்‌ போற்றுமத வேள்குமாரெட்‌ டேந்திரமனு
நீதிதழைத்‌ தோங்கவென்றே நெல்லளந்து கண்டபள்ள
னூதிபமுஞ்‌ சிலவு முற்றபண்ணைக்‌ காரனுக்கே
யாதிமுதல்‌ அந்தமட வாயுரைத்தனனே .

சிந்து

173. கொண்ட லிளசைக்‌ குமாரெட்ட மேந்திர
மண்ட லீகரன்‌ பண்ணை தனியின்று
கண்டிடும்‌ நெல்லுக்கும்‌ புல்லுக்‌ குமுள்ள
கணக்குநா(ன்‌) சொல்லுகிற னாண்டே.

174. மாலோன்‌ வணங்குமெட்‌ டீசுபரர்பூசை
வகைக்கெனச்‌ சீரகச்‌ சம்பா நெல்லில்‌
நாலா யிரங்கோட்டை யோர்துகையா யம்மை
நாதபட்டர்‌ வசமளந்தேன்‌

175. மெய்யான காரண ராம வெங்கடாசல
விஷ்ட்டுணுவின்‌ கோவிற்குச்‌ சம்பா நெல்லிலை
யாயிரங்‌ கோட்டை நம்பி திருமலை
அய்யங்கார்‌ தன்வச மளந்தேன்‌.

176. சாத்தூர்‌ பெருமாள்‌ படித்தரப்‌ பூசை
தவறாம லென்றென்னும்‌ நடக்கவுங்கள்‌
வார்த்தைப்‌ படிக்காயிரங்‌ கோட்டைக்‌ கஷ்தூரி
வாணனம்‌ பாரத்தில்‌ அளந்தேன்‌.

177. விண்ணோர்‌ பரவுங்‌ கழுகாசலக்‌ குக
வேளுக்குப்‌ பூந்தாளைச்‌ சம்பா நெல்லை
அண்ணப்‌ பட்டர்‌ வசமெண்‌ ணாயிரங்‌ கோட்டை
யட்டி பண்ணாமலே யிளந்தேன்‌.

178. ஆதிவெயி லுவந்தாள்‌ முப்பிடாரி .
யலங்காரிக்‌ கைஞ்னூறு கோட்டை மனு
நீதிய தாகவே பண்டாரங்‌ கையினில்‌
நோ்முத்துச்‌ சம்பாநெல்லளந்தேன்‌.

179. மங்காத கீர்த்தி பெறுமெட்டையா
புரத்தங்காள்‌ நாயகிக்‌ கெனவேகன
பொங்கமாய்‌ முன்னூறு கோட்டைநெற்
பூசாரி யங்கணன்‌ பாரிசமளந்தேன்‌.

180. செப்ப முறுந்தவ சித்தம்பிரானுக்குச்‌
சித்திரக்‌ காலி நெல்லதிலே சைவச்‌
சுப்பன்‌ பண்டாரம்‌ வசமளந்தேனோ
துகையாயிருநூறு கோட்டை

181. தாரணி போற்று மிளசையன்தான்‌
சத்திரத்‌ துக்கே ராசவெள்ளை நெல்லி
லாருமகிழச்‌ சிதம்பரய்யன்‌ வசத்‌(ந்‌)தா
ஆயிரங்‌ கோட்டை யளந்தேன்‌

182. குலதெய்வ மெனுஞ்‌ சகதேவித்தாய்க்‌
கானைக்‌ கொம்பன்‌ சம்பாக்‌ களஞ்சியத்தில்நா
னில்வரமாக முன்னூற்‌ றஞ்சு கோட்டை
நெல்தந்தி நேரத்தி லளந்தேன்‌.

183. காசிநகர்‌ தனில்‌ வாசமிகும
விசுவேசர்‌ படித்தரம்‌ நடக்கும்படி
பூசை தவறாம லாயிரங்‌ கோட்டைநெல் :
போசனச்‌ சம்பாவி லளந்தேன்‌.

184. தீர்த்த விசேடம்‌ பெறுந்‌ தனுக்கோடி
சிவராம லிங்கர்‌ பூசனைக்குக்கண்‌
பார்த்து மோராயி ரங்கோட்டை நெல்‌ நேத்தியாம்‌
பள்ளயச்சம்பாவி ளைந்தேன்‌.

185. காசினி போற்றிய ரற்றின கிரிக்கோவிற்‌
கட்டளைக்‌ கெண்ணூறு கோட்டைவிசு
வாசம்தான்‌ சிவாய பண்டாரம்‌
வசத்தில்‌ மிளகிநெல்லளந்தேன்‌.

186. கூடல்‌ வளர்‌ சொக்கர்‌ மீனாட்சிக்‌ கெண்ணூறு
கோட்டைநெற்‌ குங்குமச்‌ சம்பா விந்த
நாடறியும்படி கட்டளை மீனாட்சி
நாதபட்டர்‌ வசமளந்தேன்‌.

187. ஆழ்வார்‌ திருநகரில்ப்‌ பெருமாள்‌
கட்டளைக்கென நானூறு கோட்டைநெல்லிற்‌
தாழ்வு வாராமலே சேஷயங் கார்க்குப்பூந்‌
தாழையம்‌ பாரத்தி லளந்தேன்‌.

188. காந்திமதி வடிவாம்‌ நெல்லை நாயகர்‌
கட்டளைக்‌ காயிரங்கோட்டைடமன
வாந்தக மாகப்‌ புழுகுச்சம்பா நெல்லை
வாடிக்கையாகவே யளந்தேன்‌.

189. புன்னைவனச்‌ சங்கரேசுபரர்‌ கோவிலுட
பூசைதவறாமல்‌ நடக்கத்‌ தானே
யன்னதானச்‌ சம்பா நெல்லோர்‌ துகையாய்‌
அறுநூறு கோட்டை நானளந்தேன்‌.

190. மங்கையெனுங்‌ கோவிற்பட்டியதனிலே
வாழ்பூவண நாதர்‌ பூசைக்கென்றே
யிங்கிதமாகவே முன்னூறு கோட்டைநெல்
லீற்குச்‌ சம்பாவினி லளந்தேன்‌.

191. சந்தவரைத்‌ திருச்செந்தூரில்மேவிய
சண்முக நாதர்‌ கட்டளைக்கே நல்ல
வெந்தையச்‌ சம்பா வெழுநூறு கோட்டைநெல்
வேலன்‌ பகுத்தியி லளந்தேன்‌.

192. சாத்திர தோத்திர வேத பாராயண
தாத்தையங்கார்‌ வகைக்கெனவே நம்ம
ளாத்தி கிணத்தில்‌ அஞ்நூற்றொரு கோட்டைநெல்
காத்தன்‌ பகுத்தியி லளந்தேன்‌.

193. மோட்சம்‌ பெறும்படி மந்திர யாக
முறைதவ றாது செய்வேதச்‌ சுப்பர
தீட்சதருக்‌ கெழுநூற்‌ றொருகோட்டைநெற்
சீரகச்சம்பாவி லளந்தேன்‌.

194. ஆதிக்கத்துக்குட்‌ பரம்பரையான்கண்‌
ணப்ப குருசாமி தனக்கே யின்று
மாதிட்ட மாக வெண்ணுற்‌ றஞ்சி கோட்டைநெல்‌
மாசற்ற சம்பாவி லளந்தேன்‌.

195. நற்றமிழர்‌ காக்கும்‌ பனகடிகை
நமசிவாயப்‌ புலவருக்கே துரை
சொற்றவ றாமல்‌ முன்னூற்றஞ்சு சோட்டைநெல்
துய்ய வெள்ளைதனில்‌ லளந்தேன்‌.

196. வீணைதனிற்‌ சுரக்கியான மிசைத்திடும்‌
வெள்ளை யண்ணாவி குமாரர்க்கென்றே
வாணர்புகழத்‌ தொண்ணூற்‌ றஞ்சுகோட்டைநெல்
வாழைப்பூச்‌ சம்பாவி லளந்தேன்‌.

197. கத்தன்‌ குமாரெட்ட பாண்டிய தெய்வேந்திர ப
கன்னன்‌ நிருநாமந்‌ துதிக்கும்‌ நாகூர்‌
முத்துப்புலவன்‌ வளவுக்குத்‌ தானுண்ண
முன்னூறு கோட்டை நெல்லளந்தேன்‌.

198. திட்டமதாய்க்‌ குளவெட்டுக்‌ கென்றே
சேரிக் கெட்டும்‌ நெல்லாயிரங்‌ கோட்டையதைக்‌
கெட்டியதாய்‌ நோட்டம்‌ பார்க்கின்ற ராக்‌
கப்பன்‌ செட்டியார்‌ தன்‌ வசமளந்தேன்‌.

199. சட்டம தாகப்‌ படிக்குங்கனக
சபாபதியர்‌ பிள்ளை கணக்கின்படி
கொட்டிய முத்துப்பேயன்‌ பாலெண்ணாயிரங்‌
கோட்டைநெற்‌ பாட்டத்தி லளந்தேன்‌.

200. உவணகிரி சுற்றித்‌ தேரோட்டி வைப்பதற்‌
கொன்பதி னாயிரங்‌ கோட்டை நெல்‌
லெவருமகிழ குமாரவேல்மணி யத்துக்‌
கேற்கவே தீர்க்கமா யளந்தேன்‌.

201. சம்பாதி வெற்புக்‌ குமரகுருபரர்‌
சன்னதிச்‌ சத்திரம்‌ நடக்கவென்றே
சொம்பு பெறவே தொண்ணூற்‌ றொருகோட்டைநெற்‌்
சுப்பன்‌ பகுத்தியிலளந்தேன்‌.

202. இந்தவகை யன்பத்‌ தீராயிரத்‌ தெழுநூற்‌
றொரு கோட்டை நெல்நீக்கிச்‌ சேரில்‌
வந்த நெல்‌ தொண்ணூற்‌ றிரண்டு லட்சங்‌
கோட்டை சொந்தத்‌ திருப்புக்‌ காணாண்டே

203. சம்பிறுதிப்‌ பிள்ளை வயித்திய லிங்கத்‌
தயாலெழுதுங்‌ கைக்கணக்கின்படி
யம்பாரஞ்‌ சேரிற்களஞ்சியந்‌ தோறும்‌
அனேகநெற்கட்டினே னாண்டே.

204. இத்தனை நெல்லு முள்ளூர்‌ மணியம்‌
வெங்கடேசு ரெட்டுவேள்‌ முன்னிலைக்கே யின்று
கர்த்த னுத்தாரப்‌ படிக்களந்தே சேரிற்‌
கட்டிவைத்தேன்‌ பண்ணையாண்டே.

கலிப்பா

205. கண்டநெல்‌ லுக்குள்ள கணக்கனைத்துங்‌ கண்டபள்ளன்‌
கொண்ட பெண்‌ டென்றேன்‌ கணக்குக்கூ ராத்தேதெனவே
வண்டனைய மைக்கருங்கண்‌ மானாளர்‌ மூத்தபள்ளி
துண்டரிகப்‌ பள்ளியாமுன்‌ சொல்லத்‌ துணிந்தாளே

நெல்‌ அளந்த குறிப்பு: இந்நூலில்‌ அரண்மனை நெல்‌ யார்‌
யாருக்கு நல்கையாக அளக்கப்பட்டது என்பதற்கான சில
குறிப்புகள்‌ காணப்படுகின்றன. எட்டையபுர சமத்தான -
வரலாற்றை அறிவதற்குக்‌ இக்குறிப்புகள்‌ பெரிதும்‌ தரவுகளாக
அமைந்து துணை செய்யும்‌.

இக்கணக்கை எழுதுபவன்‌ தன்னைப் பற்றிக்‌ கூறிக்கொள்ளும்போது, :.

“கண்டிடும்‌ நெல்லுக்கும்‌ புல்லுக்கு முள்ள

கணக்கு நா(ன்‌) சொல்லுறே னாண்டே:” (பா: 173)

எனத்‌ தன்னை அறிமுகப்படுத்திக்‌ கொள்கிறான்‌.

இதுபோன்ற எத்தனையோ தகவல்களைத் தாங்கியிருக்கின்றன நம் இலக்கியங்கள்.

[கட்டுரையாளர் - வழக்குரைஞர்,

மனித உரிமை ஆர்வலர், அரசியற் செயற்பாட்டாளர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com