கவலை வேண்டாம்; கரோனாவை வெல்லலாம்: மீண்ட ஒருவரின் தன்னம்பிக்கைக் குறிப்பு

வெல்லக் கூடியதுதான் கரோனா தொற்று. துணிச்சலாகவும் திட்டமிட்டும் எதிர்கொண்டால் கவலைப்பட வேண்டாம், மீண்டு விடலாம் என்று குறிப்பிடுகிறார் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர்.
வெல்லலாம் கரோனாவை!
வெல்லலாம் கரோனாவை!

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கரோனா நோய்த் தொற்று. அச்சு - காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவரும் செய்திகளாலும் வெளியிடப்படும் விதத்தாலும் கரோனா வந்தாலே அவ்வளவுதான் என்றொரு மனநிலை மக்களிடையே பரவிக் கிடக்கிறது.

ஆனால், அப்படியல்ல. வெல்லக் கூடியதுதான் கரோனா தொற்று. துணிச்சலாகவும் திட்டமிட்டும் எதிர்கொண்டால் கவலைப்பட வேண்டாம், மீண்டு விடலாம் என்று குறிப்பிடுகிறார் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர்.

இவர் யார், எவர், பின்னணி பற்றிய தகவல்கள் தெரியவில்லை. எனினும், கரோனாவை எதிர்கொண்டு வென்ற அனுபவத்தை அவர் எழுதியுள்ள விதம் அருமை! இதுவும் சமூக ஊடகங்களில்தான் வலம் வருகிறது.

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய குறிப்பு:

"கணேஷ் (C-68), 
ஆனந்தம் குடியிருப்பு.

இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முகக் கவசத்தோடுதான் வெளியில் செல்வேன், கைகளில் கையுறை அணிந்து இருப்பேன், சானிடைசர் பயன்படுத்துவேன்.

08.06.2020 அன்று காலையில் ஒருவிதமான சோர்வு இருந்தது, சரி இரவு தூக்கம் சரியில்லை போல என என்னை நானே தேற்றிக்கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்க சென்றேன். 
நேரம் செல்லச் செல்ல ஒருவிதமான குளிர் ஊடுருவத் தொடங்கியதையும், உடல் அடிக்கடி பதற்றப்படுவதையும் என்னால் உணர முடிந்தது. மதியம் மூன்று மணிக்குள்ளாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் அடைந்துவிட்டேன். சுரம்: 99°.

09.06.2020. லேசான ஜுரம் இருந்தது தொண்டையில் ஒருவிதமான கரகரப்பும், வயிற்றில் உணவு செரிக்காத ஒருவித உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதை உணர முடிந்தது. என் நிலை கண்டு என் மனைவி பதற்றம் அடைவதை பார்க்க முடிந்தது.

எனக்குக் கழிப்பறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கித் தரப்பட்டது. நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். சுரம்:99°

10.06.2020. சுவாசம் வேகமாக நடைபெற்றது. முழு சுவாசம் நடைபெறவில்லை முழு சுவாசத்திற்கு முயற்சி செய்தால் இருமல் வந்தது. கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டேன், நான் பிரச்சினையில் இருக்கிறேன் என்று. மிக நெருங்கிய நல்ல நண்பர்களுக்கு என் நிலையை விளக்கினேன். யாரும் என்னை பயப்படுத்தவில்லை, மாறாக உற்சாகப்படுத்தினார்கள். பயப்பட வேண்டாம் என்றார்கள், உணவு முறைகளைப் பரிந்துரைத்தார்கள். எனக்காக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். சுரம்: 99°.

(உணவு முறை- 45 நிமிடத்திற்கு ஒருமுறை சூடான பானம் ஏதாவது ஒன்று - வெந்நீர், டீ, இஞ்சி சாறு, ரசம், சூப், லெமன் டீ, சித்தரத்தை கசாயம் etc) (கபசுரக் குடிநீர் இரு முறை மட்டும்). குளிர்ந்த உணவு இல்லாமல் வாய்க்கு பிடித்த எந்த உணவையும் சாப்பிடலாம் ( சைவம் என்றால் கொண்டை கடலை சுண்டல் தினமும், அசைவம் என்றால் முட்டை, கோழி).

11.06.2020:  தொண்டையில் அடிக்கடி யாரோ துளையிடுவது போன்று ஒரு வலி. ஒட்டுமொத்த உடலிலும் வலி. அந்த நேரத்தில் என்னுடைய மிகக் கடினமான செயல் என்னவென்றால் படுக்கையிலிருந்து எழுந்து வெந்நீர், உணவு எடுத்துக்கொள்வது. சிறுநீர் கழிக்கச் செல்வது. சுரம்: 99°.

(ஆவி பிடிப்பது மிக முக்கியம்,  நம் பாரம்பரிய ஆவி பிடிக்கும் முறைகளை விட, 300 ரூபாய்க்கு விற்கும் எந்திரம் (Vaporizer) எளிதானது. அந்த நீரில் ஒரு பல் பூண்டு, அதே அளவு இஞ்சி, சிறிது மஞ்சள் தூள் ஒரு வெற்றிலையைக் கசக்கிப்  போடவேண்டும். வரும் ஆவியை புனல் கொண்டு சிகரெட் பிடிப்பது போல் இழுக்க வேண்டும், இருமல் வரும், பயப்பட வேண்டாம். (இது நுரையீரலில் தங்கியுள்ள கிருமிகளைக் கொன்று வெளியே கொண்டு வரும்). ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை செய்தால் நலம்.

12.06.2020: உடல் சோர்வடைய தொடங்கிவிட்டது. படுக்கையில் திரும்பிப் படுப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது. சுரம்: 99°

13.06.2020 to 15.06.2020: படுக்கையிலிருந்து எழ மிகவும் சிரமப்பட்டேன். உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமலிருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி, தாகம், குளிர் - வெப்பம் இது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாகப் புரிந்துகொண்டேன். எனது சகோதரன் ஆக்சி மீட்டர் என்ற கருவியை வாங்கி வந்து கொடுத்தான். அதில் ஆக்ஸிஜன் அளவு 92 என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினான். நல்ல வேலை, எனக்கு 95 முதல்  99 வரை மாறி மாறி ஆக்சிஜன் அளவு இருந்தது. சுரம்:99.4°.

(14.06.2020 இரவு, ஒரு முறை தரையில் மயங்கி விழுந்தேன், எவ்வளவு நேரம் என தெரியாது, ஆனால் நானே எழுந்து விட்டேன், அதன்பின் நல்ல மாற்றம்).

16.06.2020: உடல்வலி குறையத் தொடங்கியது. ஆனால் உடல் பதற்றப்படுவது நிற்கவில்லை. உள்ளே குளிரும் வெளியே வேர்வையும் ஒருவிதமான புதிய உணர்வை ஏற்படுத்தியது. பின் என் மருத்துவ நண்பர் அதைப் பயம் என்றார். நான் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது என முடிவெடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். சுரம்: 99.3°

(அதுவரை நான் மருத்துவமனை செல்லவில்லை, அதற்கு காரணம் என்னால் இந்த நோயை வெற்றி கொள்ள முடியும் என்று இருந்த நம்பிக்கை, மற்றொன்று மருந்தில்லாத ஒரு நோய்க்கு மருத்துவர் என்ன செய்வார்). (வயிறு புண்ணானது போன்ற ஒரு உணர்வு தோன்றியதால் கபசுர குடிநீர் பருகுவதை நிறுத்திவிட்டேன்).

17.06.2020: காலை 11 மணி, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது. ஆம் நான் ஒரு கோரானா நோயாளி. இப்போது என் குடும்பம் மிகவும் பதற்றம் ஆகிவிட்டது. என் மனைவி அரசாங்கம் வந்து என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்து தன் தம்பியை, என் மச்சினனை உடனே உதவிக்கு அழைத்தாள். சென்னையின் மிகப் பிரபலமான கோவிட் மருத்துவமனையில் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டது, உபயம் என் மைத்துனன்.

என்னைப் பல பரிசோதனைகள் மேற்கொண்ட பின் அந்த மருத்துவர் என் மனைவியிடம் மிக உறுதியான ஒரு வார்த்தை சொன்னார் "உங்கள் கணவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். இனி அவருக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை."

 தனிமைப்படுத்திக் கொண்டதை மேலும் பத்து நாள்களுக்குத் தொடரச்  சொன்னார். என்னை அவர் பரிசோதித்ததை அறிக்கையாகத் தயார் செய்து கொடுத்தார். அரசாங்கத்திடமிருந்து ஆள் வரும்போது அதை காட்டச் சொன்னார். 

அந்த மருத்துவர், என் மனைவியின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்தார். என் மனைவி, அந்த மருத்துவரிடம் என்னை அரசாங்கம் கூட்டி செல்ல மாட்டார்கள் என்ற உறுதியை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம். சுரம் இல்லை.

18.06.2020: உடல் வலி சுத்தமாக இல்லை. பசி இல்லை, தாகம் இல்லை. நானாகவே உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்கிறேன். உடல் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து விட்டிருக்கிறது. இந்த சுய சிறைக்குள் எதிர் வரும் நாள்களை ஓட்ட வேண்டும். 

என்னைக் காப்பாற்றியதாக நான் கருதும் மூன்று விஷயங்கள். 
1. ஆக்சிஜன் அளவு குறையும்போது எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து பருகுவது. 
2. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆவி பிடித்தது ( மூன்று நாள்கள் மட்டும்)
3. சூடான ஏதாவது ஒரு பானத்தை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொண்டது, (5 நாட்கள்)
4. என்னை வெளியில் இருந்து கவனித்துக் கொண்ட என் மனைவி.

இவையே என்னை காத்தது என நான் உறுதியாக நம்புகிறேன். 

தொண்டையில் உருவாகும் இந்தக் கிருமியை நுரையீரலுக்கு அனுப்புவதும், வயிற்றுக்கு அனுப்புவதும் நம் கையில்தான் உள்ளது. 

கிருமி நுரையீரலுக்குச் என்றால் அது உங்களை வென்றுகொண்டிருக்கிறது என்று பொருள். வயிற்றுக்குச் சென்றால் நீங்கள் அதை வென்றுவிட்டீர்கள் என்று பொருள். வயிற்றுக்கு அனுப்பும் வேலையை நீங்கள் குடிக்கும் சூடான பானம் செய்து விடும். பயம் கொள்ளத் தேவையில்லை.

மூச்சுவிட மிகவும் சிரமமானால் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டால் நன்றாக மூச்சுவிட முடியும்.

கரோனா மனிதனால் வெல்ல முடியாத ஒரு நோயல்ல. நாம் வாழப் பிறந்தவர்கள், கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயிடம் தோற்றுப் போகிறவர்கள் அல்ல‌.

என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என்னைப் பார்க்காமலே எனக்காக சிபாரிசு செய்த என் மைத்துனனின் நண்பர்கள், எனக்கு பிரச்னை என தெரிந்தவுடன் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்."

கரோனா என்றதும் அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. துணிந்து எதிர்கொள்ள வேண்டியதுதான். வெல்ல முடியும் என்பதற்கு இவருடைய குறிப்பும் ஓர் எடுத்துக்காட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com