புதுவையில் ஜூலை 3 முதல் வெளிமாநிலத்தவர்களுக்கு அனுமதி: முதல்வர் நாராயணசாமி

புதுவையில் ஜூலை 3-ஆம் தேதி முதல் வெளிமாநிலத்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.
புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுவையில் ஜூலை 3-ஆம் தேதி முதல் வெளிமாநிலத்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. மேலும், ஜூலை 31-ஆம் தேதி வரை தினமும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் நாராயணசாமி, முகநூலில் நேரலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் மார்ச்ம் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர் 5 முறை தளர்வுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் அதிகப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக மிகப்பெரிய தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி பள்ளி, கல்லூரிகள், கல்வி பயிற்சி மையங்கள் ஜூலை 30-ஆம் தேதி வரை திறக்கக் கூடாது. ஜிம்கள், ஹோட்டல்களில் உள்ள மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்கும்.

ஏற்கெனவே வெளிமாநிலத்தில் இருந்து வருவோர்களுக்கு கடந்த 10 நாள்களாக தடை விதிக்கப்பட்டு எல்லைகள் மூடப்பட்டன. இதன் மூலம் புதுவையில் கரோனா தொற்று குறைந்தது. இந்நிலையில், மத்திய அரசு உத்தரவுபடி பிற மாநிலத்தவர்கள் புதுவைக்குள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு வர அனுமதி அளிக்கப்படும்.

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அரசியல் கட்சிகள் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். காணொளி காட்சி மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

புதுவையில் இரண்டாம் கட்ட தளர்வு ஜூலை 3 முதல் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இப்போது அனைத்து கடைகளும் 2 மணி வரை மட்டுமே திறக்கலாம் என்ற நடைமுறை மாற்றப்பட்டு இரவு 8 மணி வரை திறக்கலாம். ஹோட்டல்கள் இரவு 8 மணிக்குள் பொட்டல உணவுகளை விற்பனை செய்து கொள்ளலாம். கடைகளை இரவு 9 மணிக்குள் மூடிவிட்டு செல்ல அனுமதி அளிக்கப்படும். இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமுடக்கம் முழுமையாக அமல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கும் திட்டத்தை நவம்பர் வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. புதுவைக்குத் தேவையான கோரிக்கைகள் குறித்து 17 முறை எழுதிய கடிதங்களுக்கு பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை.

கரோனா பரவலை தடுக்க மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கவும் புதுவைக்கு கேட்ட ரூ.995 கோடி தொகை குறித்து பிரதமர் பதில் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. வேலையில்லாமல் இருக்கும் சிறு, குறுந்தொழில்கூட தொழிலாளர்கள், இளைஞர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சுயஉதவிக்கழுவினருக்கு நிதி வழங்க உதவி கேட்டும் பிரதமர் தரவில்லை.

புதுவைக்கு மார்ச் முதல் ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு தரவில்லை. மத்திய ரிசர்வ் வங்கியில் மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்த வேண்டும். கரோனா பாதிப்பை சமாளிக்க ரூ.20 லட்சம் கோடி திட்டம் என பிரதமர் கூறுகிறார்.ஆனால், அது வங்கிகள் மூலம் கடன் கொடுப்பது தானே தவிர, புதிய திட்டம் அல்ல. ஏற்கெனவே மத்திய பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடிக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு அரிசியை கொடுத்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும்.

கடந்த 15 தினங்களாக சாலைகளில் வரும் பொதுமக்களுக்கு காவல்துறை தொல்லை கொடுப்பது தொடர்பாக மாநில காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவாவிடம் பேசியிருக்கிறேன். அதை கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com