கொல்லும் கரோனா, சாகும் மனிதாபிமானம்; வீதியில் இறந்துகிடந்த மனிதர்

கரோனாவால் உலகில் ஒருபக்கம் மனிதர்கள் இறந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இன்னொரு பக்கம் மனிதாபிமானமும் செத்துக்கொண்டிருக்கிறது.
கொல்லும் கரோனா, சாகும் மனிதாபிமானம்; வீதியில் இறந்துகிடந்த மனிதர்

கரோனாவால் உலகில் ஒருபக்கம் மனிதர்கள் இறந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இன்னொரு பக்கம் மனிதாபிமானமும் செத்துக்கொண்டிருக்கிறது.

சென்னையில் 53 வயதான ஒருவருக்கு மரணம் வந்ததும் இறந்த பிறகும் அவருக்கு நேர்ந்த கொடுமைகளும் சொல்லி மாளாதவை.

ரவி என்கிற அவர் தினக்கூலித் தொழிலாளி. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகே வேலை பார்த்துக்கொண்டு, அருகிலேயே ஓர் அறையில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

கரோனா அச்சத்தால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் வேலையும் இல்லை சோறும் இல்லை என்பதால் ஜாபர்கான்பேட்டையிலுள்ள அவருடைய சகோதரியின் வீட்டுக்குச் சென்று தங்கியிருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்குக் கடுமையான சளிப் பிடித்திருக்கிறது. உடனே அருகிலிருந்தவர்கள், அவருக்கு கரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகப்பட்டு மாநகராட்சிக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனே ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்காகச் சளி மாதிரிகளை எடுத்துக்கொண்டு, மாலையில் மீண்டும் ஆம்புலன்ஸில் வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிட்டனர்.

பிரச்சினை அப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அவருடைய சகோதரியின் வீட்டைச் சுற்றியிருப்பவர்களும் வீட்டு உரிமையாளரும் ரவியை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

வேறு வழியில்லை. வீட்டை விட்டு வெளியேவந்துவிட்ட ரவி, அருகே தெருவோரத்தில்  தங்கியிருந்திருக்கிறார்.

வியாழக்கிழமை காலை மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக கரோனா தொற்று இருக்கிறதா என்றறிய விசாரித்துவாறு சென்றிருக்கின்றனர். அப்போது ரவி, அவருடைய சகோதரி வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அப்பாதுரை தெருவில் படுத்துக் கிடந்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்தது காலை 8.30 மணி வாக்கில். அவரைக் கேட்டபோது, கரோனா சோதனைக்காக சளி மாதிரி கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக, அவரை கரோனா காப்பகத்துக்கு அனுப்பும்  முயற்சியில் 104 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், ஒரு மணி நேரம் கழித்துதான் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்திருக்கிறது. இதனிடையே, ரவி இறந்தேபோய்விட்டார்.

இப்போது அடுத்த துயரம்.

ரவியின் கரோனா பரிசோதனை முடிவுகள் தெரியாத நிலையில், அவர் எந்த எல்லைக்குள் வருகிறார், அவருடைய உடலை என்ன செய்வது, யார் அடக்கம் செய்வது? ஏறத்தாழ எட்டு மணி நேரம் தொடர்ந்திருக்கிறது இந்தக் குழப்பம்.

104 ஆம்புலன்ஸ் டிரைவரோ இறந்துவிட்டவரின் உடலை எடுத்துச் செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். இவருடைய உடலை என்ன செய்வது என்பது பற்றி மருத்துவமனை ஊழியர்கள் முடிவு செய்வதா, மாநகராட்சி ஊழியர்கள் முடிவு செய்வதா, அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்று எல்லாருமாகக் குழம்(ப்)பியிருக்கின்றனர்.

கடைசியாக, மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல அலுவலர்கள், காவல்துறையினர் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி, ரவியின் உடலை அகற்றிச் சென்றுள்ளனர். நேரம் மாலை 4.40 மணி இருக்கலாம்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அமரர் அறைக்கு ரவியின் உடல் சென்றடைந்தது.

இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கரோனா தடுப்புக் கவசங்களை அணிந்துகொண்டனர். கரோனா தொற்று இருந்தால் என்னென்ன  முறைகளைப் பின்பற்ற வேண்டுமோ அதன்படி அனைத்தும் செய்யப்பட்டன. அந்தப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ரவியின் இறுதிச் சடங்குகளைத் தன்னுடைய வீட்டில் நடத்தக் கூடாது என்று மாநகராட்சியினரிடம் வீட்டு உரிமையாளர் தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் ரவியின்  சகோதரியும் அவருடைய உடலை எடுத்துச் செல்ல இயலாதெனத் தெரிவித்துவிட்டார்.

இறந்த ரவியின் குடும்பத்தினரின் எழுத்துமூல ஒப்புதல் அளிக்காதவரை அவருடைய சடலத்தைப் புதைக்கவும் இயலாது என்பதால் மாநகராட்சி அலுவலர்கள், அவருடைய உறவினர்கள் பற்றி விசாரித்துக் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, வியாழக்கிழமை காலையிலேயே அவருடைய பரிசோதனை முடிவு வந்திருக்கிறது - ரவிக்குக் கரோனா தொற்று இல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com