போராடிப் பெற்ற இலவச மின்சாரமும் பறிபோகுமோ? உயிர்துறந்த விவசாயத் தியாகிகளின் பட்டியல்!

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம், மத்திய அரசின் சில நடவடிக்கைகளால் ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் இன்று ஏற்பட்டிருக்கிறது.
மேடையில் நாராயணசாமி நாயுடு
மேடையில் நாராயணசாமி நாயுடு

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம், மத்திய அரசின் சில நடவடிக்கைகளால் ரத்து செய்யப்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் இன்று ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சும்மா கிடைத்துவிடவில்லை.  விவசாயிகள் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் வீறுகொண்டு எழுந்த போராட்டத்தில் - தொடர்ந்து நடந்த  விவசாயிகளின் போராட்டங்களில் எண்ணற்றோரைப் பலிகொடுத்துப் பெற்றதுதான் இலவச மின்சாரம்.

1970-ல் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தியதை எதிர்த்துத் தமிழக விவசாயிகள் போராடினார்கள். 

1970 மே 9 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் கலந்துகொள்ள பெரும் பேரணி நடந்தது. கட்டைவண்டி போராட்டம் என்று கோவை நகரையும் மற்ற தமிழக நகரங்களையும் திக்குமுக்காடச் செய்தனர் அன்றைய விவசாயிகள்.

நகரங்கள் அதிர்ந்தன. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால், ஜூன் 15-ல் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டமும்  ஜூன் 19-ல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்குமுறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அரசைப் பணிய வைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கு 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 1.1.1972 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்துக் கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 அம்சக் கோரிக்கைகளை, அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள். 15.4. 1972-க்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடுவும் விதித்தார்கள்.

மே 9-ல் மறியல் போராட்டம் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் நுகரும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை 2.06.1972 முதல் 4.06.1972 வரை நிறுத்தினார்கள். இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்பந்தம் கொடுப்பதே நோக்கம்.

மாட்டு வண்டிப் போராட்டம்

இதற்குப் பின்னும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள் 07.06.1972-ல் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் ஸ்தம்பித்தது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி ‘மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த பல தலைவர்களில் நாராயணசாமி நாயுடுவும், டாக்டர் சிவசாமியும் குறிப்பிடத் தக்கவர்கள்.

போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் 

பல்வேறு போராட்டங்கள், ஏறத்தாழ இருபது ஆண்டுகள் முன்னெடுத்துப் பல விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்து கிடைத்ததுதான் இலவச மின்சாரம். எம்ஜிஆர் ஆட்சியில் சிறுகுறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்தாலும், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை 1989 ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த மு. கருணாநிதி அறிவித்தார். அன்றிலிருந்து இலவச மின்சாரம் தொடர்கிறது.

1950, 60, 80-களின் இறுதி வரை விவசாயிகள் கரண்ட் பில் கட்டுவதற்காக ஒரு பாடாகத் தத்தளிப்பார்கள். அப்படியே கட்டுவதற்கு பணம் இருந்தால்கூட சாதாரண விவசாயிகூட குருவிக்குளம், கழுகுமலை, கோவில்பட்டி, சங்கரன்கோவில் என அந்தந்த வட்டார விவசாயிகள் சிரமப்பட்டு அங்கே சென்று மின்சாரக் கட்டணத்தைக் கட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.

இன்றைக்கு இருப்பது போல போக்குவரத்து வசதிகள் கிடையா. வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று மின்வாரிய அலுவலகங்களில் பணம் கட்ட வேண்டும். பணமில்லாத விவசாயிகள் கடன் வாங்கி மாதா மாதம் கட்டி அவஸ்தைப்படுவதும் உண்டு. இப்படியான பாடுகள் விவசாயிகளுக்கு மின்கட்டணத்தில் இருந்தன. இந்த பிரச்னைகளை எல்லாம் எதிர்த்து போராடும் காலங்களில்தான் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு எண்ணற்ற விவசாயிகள் பலியானார்கள்.

அப்படியான நிலையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் விவசாயிகள் இராமசாமி, மாரப்பன், ஆயிக்கவுண்டர் ஆகியோர் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள்.

கோவில்பட்டி அருகே, பழைய அப்பநேரி கிராமத்தில் சேர்ந்த கந்தசாமி நாயக்கர் 5-7-1972இல் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் சங்க போராட்டத்தில் சுட்டுத்தள்ளப்பட்டார். அவருடைய பெயரில் படிப்பகம் ஒன்றை அவருடைய சொந்த கிராமமான பழைய அப்பநேரியில் நிறுவ காமராஜர் நேரில் வந்து 45 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டியதுடன் முடிந்துவிட்டது. அன்றைய இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலமும் நேரடியாக ஆறுதல் தெரிவிக்க பழைய அப்பநேரிக்கு வந்தார். விவசாயிகளின் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு வழங்கப்பட்ட தொகையைப் பெறுவதற்கு இவருக்கு வாரிசுகூட இல்லை. இவரின் மனைவியும் ஏழ்மையிலேயே மறைந்துவிட்டார்.

இதே காலகட்டத்தில் 5-7-1972 இல் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒன்பது விவசாயிகளும், அன்று ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டம், இன்றைக்கு விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி, மீசலூர், பாலவனத்தம் கிராமங்களில் முறையே ஒருவர் வீதம் மொத்தம் மூன்று பேரும், பெருமாநல்லூரில் மூன்று பேரும், ஆக மொத்தம் 15 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள். இறுதியாக 1993ல் கோவில்பட்டி சம்பவம் வரை 46 விவசாயிகள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானதாக தகவல்கள் கிடைக்கின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் கோவில்பட்டியில் விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் எத்திராஜ் நாயக்கரும் ஜோசப் இருதய ரெட்டியாரும் பலியாகினர். இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி சுப்ரமணியன் தலைமையில் 7.4.1993ல் நீதிவிசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டது. விவசாயிகள் சார்பில் நான் ஆஜரானேன். இதன் அறிக்கையை 5.5.1994ல் சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வைத்தார்.

போராட்டக் களத்தில் கட்டுரையாளர்
போராட்டக் களத்தில் கட்டுரையாளர்

தியாகி கந்தசாமி நாயக்கருக்கு நினைவுத் தூண் கோவில்பட்டி முதன்மைச் சாலையிலுள்ள பயணியர் விடுதியில் நிறுவப்பட்டது. அதுவும் கேட்பாரற்று, அதிகாரிகளால் ஒரு ஓரமாக கிடத்தப்பட்டுவிட்டது.

கோவில்பட்டியில் அவரின் பெயரில் நிறுவப்பட்ட நினைவுத் தூணையும், அவர் சொந்த கிராமத்தில் திட்டமிடப்பட்டுள்ள படிப்பகத்தையும் உடனே அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இப்படியான பல போராட்டங்களும் நிகழ்வுகளும் உள்ளன.

இதுவரையிலான போராட்டங்களில் 46 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.  காயங்களுடன் தப்பிய சிலர் சிகிச்சை பெற்று இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்னுயிரைத் தந்த அந்த தியாகிகளின் பெயர்களை முடிந்தளவு வரிசைப்படுத்துகிறேன்.

வரிசை எண், பெயர், வயது, தேதி, இடம் என்ற வரிசையில்:


1. ஆயி கவுண்டர், 33, 19.06.1970, பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
2. மாரப்பக் கவுண்டர், 37, 19.06.1970, பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
3. இராமசாமி, 25, 19.06.1970, பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
4. ஆறுமுகம், 25, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
5. முத்துச்சாமி, 21, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
6. சாந்தமூர்த்தி, 20, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
7. மணி, 30, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
8. இராமசாமி (முத்து), 32, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
9. பிச்சைமுத்து, 21, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
10. கோவிந்தராஜுலு, 16, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
11. விவேகானந்தன், 35, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
12. இராமசாமி, 23, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
13. முத்துக்குமாரசாமி, 22, 05.07.1972, அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா
14. சுப்பையன், 32, 05.07.1972, அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா
15. கந்தசாமி நாயக்கர், 55, 05.07.1972, பழைய அப்பநேரி, கோவில்பட்டி தாலுகா
16. சீனிவாசன், 18, 05.07.1972, சாத்தூர் தாலுகா, இராமநாதபுரம் ஜில்லா
17. கந்தசாமிரெட்டியார், 42, 05.07.1972 அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுகா
18. நம்மாழ்வார், 20, 05.07.1972 சூலக்கரை, சாத்தூர் தாலுகா
19. கிருஷ்ணசாமி நாயக்கர், கோவை சிறையில்.
20. பெரியகருப்பன், திருச்சி சிறையில்.
21. நாச்சிமுத்துக் கவுண்டர், 50, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
22. வி.சுப்ரமணியன், 30, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
23. பி.சின்னசாமி கவுண்டர், 51, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
24. கே.குப்புசாமி, 29, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
25. பி.கிருஷ்ணமூர்த்தி, 25, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
26. பி.மாணிக்க கவுண்டர், 52 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
27. ஆரோக்கியசாமி, 50, 10.04.1978, நொச்சியோடைப்பட்டி, திண்டுக்கல் தாலுகா
28. முருகேசக் கவுண்டர், 47, 11.04.1978, ஒடுகத்தூர், வேலூர் தாலுகா, (வ.ஆ.)
29. ஆர்.அரசுத்தேவர், 39, 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
30. பி.சர்க்கரைத் தேவர், 35 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
31. வி.புலியுடை தேவர், 32, 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
32. முத்து வேலம்மாள், 52, 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
33. வி. பாக்யத்தாள், 37, 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
34. மகாலிங்கம், 19, 23.04.1979, உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா
35. வேலுச்சாமி, 34, 23.04.1979, உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா
36. சாத்தூரப்பநாயக்கர், 56, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
37. வெங்கடசாமி நாயக்கர், 55, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
38. வரதராஜ் நாயக்கர், 32, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
39. என்.வெங்கடசாமி, 22, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
40. ரவீந்திரன், 17, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
41. முரளி, 13, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
42. மணி, 17, 31.12.1980, டி.சி.கண்டிகை, திருத்தணி தாலுகா
43. ஏழுமலை, 22, 31.12.1980, வீரப்பார், பண்ருட்டி தாலுகா, கடலூர்
44. கி. துளசிமணி, சித்தோடு, கங்கார்புரம், பவானி வட்டம்
45. எத்திராஜ நாயக்கர், 29.03.1993, வெங்கடாசலபுரம் தாலுகா, சங்கரன்கோவில் வட்டம்
46. ஜோசப் இருதய ரெட்டியார், 29.03.1993, அகிலாண்டபுரம், ஒட்டப்பிடாரம் வட்டம்

4.7.1980-ல் சென்னையில் நடைபெற்ற தமிழக விவசாய சங்க மாநாட்டிற்கு சென்ற வாகனங்கள் கவிழ்ந்து (விபத்து ஏற்பட்டு) உயிர் நீத்த விவசாயிகள்:

வரிசை எண், பெயர், ஊர்  என்ற வரிசையில்:

1. முத்துச்சாமி, ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
2. பொ. பெருமாள், ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
3. பொன்னுச்சாமி, ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
4. தண்டபாணி, ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
5. பழனிச்சாமி, ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
6. சுக்குரு (எ) சுப்பிரமணி, ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
7. முத்துச்சாமி, ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
8. கருப்பையா, ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
9. முருகன், ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
10. கந்தன், ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
11. விசுவாசம், கதிரியன் குளம், திண்டுக்கல்
12. கோயில் ஆரோக்கியம், அனுமந்தராயன் கோட்டை, திண்டுக்கல்
13. லாரி டிரைவர் திண்டுக்கல்

விவசாய சொந்தங்கள் சற்றுக் கனிவோடு இந்தத் தியாகிகளை நினைத்துப் பாருங்கள். இந்தத் தியாகிகளால்தான் இலவச மின்சாரம் என்ற உரிமை கிடைத்தது. அது இன்று பறிபோகின்ற நிலைமை.

இப்படியாகத் தமிழகத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில், விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட போராடிய விவசாயிகள் குண்டடிபட்டுத் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டார்கள்.

குறிப்பாக என்னுடைய குருஞ்சாக்குளம் கிராமம் இப்படிப்பட்ட பல தியாகிகளைப் பெற்றெடுத்ததில் பெருமைகொண்டாலும், அவர்களுடைய இழப்பை நினைத்து வேதனை கொள்கின்றது மனது. அவர்களுக்கு வீரவணக்கம்.

ஆளவந்தார்கள் விவசாயிகளை இரண்டாம் குடிமக்களாகப் பார்ப்பது இன்றும் தொடர்கின்றது.

[கட்டுரையாளர் - வழக்கறிஞர்,

அரசியற் செயற்பாட்டாளர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com