கணவர் இறந்துசரிவதை விடியோவில் பார்த்த 3 குழந்தைகளின் தாய்: பலர் உதவியால் கேரளம் திரும்பினார்

துபையிலிருந்தவாறு விடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போதே தன் கணவர் இறந்து சரிவதைப் பார்த்துக்கொண்டிருந்த, மூன்று பெண் குழந்தைகளின்  தாயான 37 வயது கேரளப் பெண், இந்தியா திரும்பினார்.
கணவர் இறந்துசரிவதை விடியோவில் பார்த்த 3 குழந்தைகளின் தாய்: பலர் உதவியால் கேரளம் திரும்பினார்

துபையிலிருந்தவாறு விடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போதே தன் கணவர் இறந்து சரிவதைப் பார்த்துக்கொண்டிருந்த, மூன்று பெண் குழந்தைகளின்  தாயான 37 வயது கேரளப் பெண், இந்தியா திரும்பினார்.

தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் அரபு நாடுகளுக்குச் சுற்றுலா விசாவில் சென்றார் கேரளத்தைச் சேர்ந்த பிஜுமோள், 37.

இவருக்கு மணமாகி 3 பெண் குழந்தைகள். இவருடைய கணவர் ஸ்ரீரிஜித், 13 ஆண்டுகள் அரபு நாடுகளில் பணிபுரிந்த பிறகு, உடல்நலக் குறைவால் நாடு திரும்பிவிட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீரிஜித், கேரளத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கணவரின் மருத்துவச் செலவுக்காகவும் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும் சம்பாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் ஒரு தரகர் மூலம் ரூ. 3 லட்சம் பணம் கொடுத்து துபை சென்றார் பிஜுமோள். அத்தனையும் வட்டிக்குக் கடன் வாங்கிய பணம்.

ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான வேலை என்று அழைத்துச் சென்ற தரகர், கொண்டு சென்றுவிட்ட இடம் மசாஜ் நிலையம். அங்கிருந்த சூழ்நிலை பிஜுமோளுக்கு ஏற்றுவராததால் மூன்றே நாள்களில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

பின்னர், தரகரைத் தொடர்புகொள்ள முயன்றால் முடியவேயில்லை. இதையடுத்துத் தனக்குத் தெரிந்த தோழி ஒருவரின் அறையில் சென்று தங்கிக்கொண்டு வேலை தேடத் தொடங்கினார் பிஜுமோள்.

இதனிடையே, பிப். 16 ஆம் தேதியுடன் இவருடைய ஒரு மாத கால சுற்றுலா விசாவும் முடிவுக்கு வந்து, இவர் தங்கியிருப்பதே சட்டவிரோதம் என்றாகிவிட்டது. இவருடைய தோழியும் ஊருக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.

இதனிடையே, இந்தியாவிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு விமானப் போக்குவரத்து உள்பட அனைத்தும் முடங்கிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் மார்ச் 23 ஆம் தேதி, அவருடைய திருமண நாளுக்கு முந்தைய நாள், கேரளத்திலிருந்த அவருடைய கணவருடன்  விடியோ அழைப்பில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோதே, சக்கர நாற்காலியிலிருந்த கணவர் சரிந்துவிழுந்து உயிரிழந்தார்.

கணவரின் இறுதிச் சடங்குகளையும் விடியோ அழைப்பிலேயே பார்த்து விடைகொடுக்க நேரிட்டுவிட்டது.  அவருடைய குழந்தைகளும் அருகேயுள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, பிஜுமோளின் நிலைமை பற்றி அறிய வந்ததும் இந்தியத் தூதரக அலுவலகத்தினர் உள்பட பலரும் உதவ முன்வந்தனர்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான டிக்கெட் பெற்று, வியாழக்கிழமை அவர் துபை விமான நிலையத்தில் புறப்பட்டு, கேரளத்தில் கொச்சிக்குத் திரும்பினார் பிஜுமோள்.

கடன் வாங்கிதான் துபைக்கு வந்தேன், வேலை கிடைத்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துவிடலாம் என நினைத்தேன், இப்படி ஏமாற்றுவார்கள் என நினைக்கவில்லை என்றார் பிஜுமோள்

எலும்பு புற்றுநோயால் கணவர் பாதிக்கப்பட்டிருந்தார். நான் வெளிநாடு வந்துவிட்ட நிலையில், அவருக்கு மஞ்சள் காமாலையும் ஏற்பட மூளைச் செயல்பாடும் பாதிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, என் கண் முன்னால் அவர் இறந்து சாய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று குறிப்பிட்டார் அவர். 

பிஜுமோள் விஷயத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமூக நலத் துறை அமைச்சர் ஷைலஜா எனப் பலரும் தலையிட்டனர். தூதரகமும் உதவிக்கு வந்தது. பிஜுமோளுக்குப் பல தன்னார்வலர்களும் உதவினர். 

ஏற்கெனவே, கரோனா காலம் காரணமாக, கூடுதல் காலம் தங்கியிருக்க நேரிட்டதற்காகச் செலுத்த வேண்டிய அபராதத்தை ஏற்கெனவே ஐக்கிய அரபு நாடுகள் அரசு ரத்து செய்திருந்தது.

உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளும் பிஜுமோள், வியாழக்கிழமை கேரளத்துக்குத் திரும்பிவிட்டார். அவருடைய ஊருக்கு அருகிலேயே பிஜுமோள் தனித்திருக்க வேண்டிய முகாம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாடு திரும்பினாலும் தனித்திருக்கும் காலம் முடிந்து மேலும் ஒரு வாரம் கழித்துதான் தந்தையை இழந்த மூன்று மகள்களையும் தாய் பிஜுமோள் சந்திக்க முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com