சண்டை, சமாதானம், காலி செய்யப்பட்ட கிராமங்கள்

இரு நாடுகளுக்கு இடையே ஒரு சண்டை, ஒரு சமாதானம், சில கையெழுத்துகள் -  ஒட்டுமொத்தமாக ஒரு ஊரினுடைய மக்களே காலி செய்து வெளியேற நேரிட்டுள்ளது.
நகோர்னா - கரபாக் பிராந்தியத்தின் கல்பஜரில் சேதமடைந்துள்ள பெட்ரோல் நிலையம்
நகோர்னா - கரபாக் பிராந்தியத்தின் கல்பஜரில் சேதமடைந்துள்ள பெட்ரோல் நிலையம்

இரு நாடுகளுக்கு இடையே ஒரு சண்டை, ஒரு சமாதானம், சில கையெழுத்துகள் -  ஒட்டுமொத்தமாக ஒரு ஊரினுடைய மக்களே காலி செய்து வெளியேற நேரிட்டுள்ளது.

தாங்கள் வாழ்ந்த வீடுகளையெல்லாம் தீவைத்துக் கொளுத்திவிட்டு, தங்கள் உடைமைகளுடன் ஆர்மீனியப் பகுதிகளை நோக்கி மக்கள் வெளியேறிச் சென்றனர்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதிகளில் முஸ்லிம்களான அஸர்களும் கிறிஸ்துவர்களான ஆர்மீனியர்களும் இணைந்துதான் வாழ்ந்தனர். இன்று முஸ்லிம்களுக்காக எந்தவொன்றையும் விட்டுவிட்டுச் செல்லக் கூடாது என்று வெறுப்பை உமிழ்கின்றனர் ஆர்மீனியர்கள்.

கல்பஜார், ஆர்மீனிய மொழியில் கர்வச்சார் : நகோர்னா - கரபாக் பிராந்தியத்திலுள்ள இந்த ஊர், சட்டப்படி அஸர்பைஜான் நாட்டின் ஒரு பகுதிதான்.

ஆனால்,  நகோர்னா - கரபாக் பிராந்தியத்துக்காக ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் நடந்த போரின் முடிவில், 1994 ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரியமான ஆர்மீனியர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது.

ஆண்டுக்கணக்கில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே அவ்வப்போது  சண்டைகள் நடந்துவந்தபோதிலும், இந்த ஆண்டு செப்டம்பரில்தான் முழு அளவிலான போர் தொடங்கியது.

இந்தப் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஷுஷா நகரை ஆர்மீனியாவிடமிருந்து கைப்பற்றிவிட்டதாக அஸர்பைஜான் அறிவித்த நிலையில், சண்டை முடிவுக்கு வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

ரஷிய அரசின் முயற்சியில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின் விளைவாக, நகோர்னா - கரபாக் பிராந்தியத்தில், கடந்த கால எல்லையைத் தாண்டி,  ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து படிப்படியாக ஆர்மீனியா வெளியேறுவதென ஒப்புக்கொள்ளப்பட்டது.

சண்டை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஒப்பந்தப்படி, கல்பஜார் கிராமத்து மக்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறினர்.

இந்த ஊரிலிருந்த ஆர்மீனிய அப்போஸ்தல தேவாலயமும்கூட முழுவதுமாகக் காலிசெய்யப்பட்டது.

இந்தப் பகுதிகளிலுள்ள பிற குடியிருப்புகளிலிருந்தும் மக்கள் வெளியேறினர்.

வாழிடங்களைக் காலி செய்துவிட்டு வெளியேறிய மக்களின் வாகனங்களால் சனிக்கிழமை, ஆர்மீனியா நோக்கிச் செல்லும்  நெடுஞ்சாலை நெரிசலில் சிக்கித் தவித்தது.

வாழ்ந்த மக்களாலேயே முற்றிலும் எரியூட்டப்பட்டு, நாசப்படுத்தப்பட்ட கல்பஜார் கிராமத்தைத் திட்டமிட்டபடி  ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்காத அஸர்பைஜான், கல்பஜாரில் சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com