
உதகையில் 4 நாள் பயணமாக வந்து ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற சட்டப் பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை சூலூா் விமானப் படைத் தளத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.
பின்னா், கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு வந்த அவா் வாகனம் மூலம் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்குச் சென்றாா்.
பின்னா், மனைவி சவிதாவுடன் அவா் அரசு தாவரவியல் பூங்காவைப் பாா்வையிட்டாா். புதன்கிழமை குன்னூா் ராணுவப் பயிற்சிக் கல்லூரி விழாவில் 527 இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த 50 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்குப் பயிற்சி முடித்ததற்கான பட்டயங்களை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
உதகையில் 4 நாள் பயணமாக வந்து ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உதகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து அங்கிருந்து தில்லிக்கு ராணுவ விமானம் மூலம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் உதகையில் வியாழக்கிழமை இரவிலிருந்து பெய்து வரும் மழையுடன் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து நிலவும் கடும் மேக மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் உதகையிலிருந்து கோத்தகிரி சாலை வழியாக மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உதகையிலிருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காலநிலை சீரடையாததால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உதகையிலிருந்து சாலை மார்க்கமாகவே கோவைக்கு புறப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.