மானாமதுரை வைகை ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீர்
மானாமதுரை வைகை ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீர்

மானாமதுரை: வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட அரசு முடிவு 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றுக்குள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக தடுப்பணை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Published on


மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றுக்குள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக தடுப்பணை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் பல 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

இதைத்தடுக்க ஆற்றுப்படுகைகளில் புதிதாக தடுப்பணைகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்வளப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் தமிழகம் முழுவதும் தடுப்பணை கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 11 இடங்களில் புதிதாக ரூ.54 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.  இவற்றில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்திலும் வைகை ஆற்றுக்குள் ஒரு தடுப்பணை கட்டப்பட உள்ளது.

இதற்காக மானாமதுரை ஒன்றியம் கீழப்பசலை வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை கட்டும் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏற்கனவே மானாமதுரை ஒன்றியத்தில் ஆதனூர் திருப்புவனம் ஒன்றியத்தில் தட்டான்குளம் ஆகிய இடங்களில் வைகை ஆற்றுக்குள் தடுப்பணைகள் கட்டி மழைத் தண்ணீர் மற்றும் வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் ஆதாரம் உயர பயன்படுத்தப்படுகிறது.

தற்போது கூடுதலாக மானாமதுரை ஒன்றியத்தில் கீழப்பசலை வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ளது.

இதற்கான பணிகள் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன் தடுப்பணை கட்டும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com