ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? - உச்சநீதிமன்றம் கேள்வி 

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


புதுதில்லி: ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அரசியலமைப்புக்கு முரணான தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கும் சட்டப்பிரிவு 124 ஏ-ஐ  அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். மேலும் நாடு முழுவதும் இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர் எஸ்.ஜி.ஓம்பத்கரே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, "ஆங்கிலயேர்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப்பிறகும் இன்னும் இந்தச் சட்டத்தை கடைப்பிடிப்பது ஏன்?, அந்த சட்டம் தேவையா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், மகாத்மா காந்தி மீது அடக்குமுறையை கையாள்வதற்காக ஆங்கிலேயே அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் இது என குறிப்பிட்ட நீதிபதிகள், அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுபாடுகளை இந்த சட்டம் விதிக்கிறது. 

தேசத்துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் மரக்கட்டையை வெட்டுவதற்காக கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. ரம்பத்தைக் கொண்டு ஒட்டுமொத்த காட்டை அழிப்பதாக இருப்பதாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதிகள், தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சட்டப் பிரிவு 66ஏ தவறாக பயன்படுத்தப்பட்டதால்அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதாகவும், தேசத்துரோக வழக்குப்பிரிவும் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது பாயக்கூடியதாக இருக்கிறது. இப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என்று தெரிவித்தனர். 

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால், இந்த முழு சட்டப்பிரிவையும் எக்காரணத்தையும் கொண்டும் நீக்கி விடக்கூடாது, தவறுகளை மட்டுமே சரிசெய்ய வேண்டும் என நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார். 

இதுதொடர்பாக அனைவரது கருத்துக்களையும் கேட்க விரும்புகிறோம் என்று கூறிய நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக, மத்திய அரசு விரிவான பதிலளிக்கக் கோரி  உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை ஒத்திவைத்தனர். 

தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சட்டப் பிரிவு 66ஏ-இன் கீழ், அவதூறாகவும் அரசுக்கு எதிராகவும் கருத்துகளைப் பதிவிடுபவா்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.

முன்னதாக, இது தொடா்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவது தொடா்பாக அதிா்ச்சி தெரிவித்திருந்தது. 

கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த சட்டப் பிரிவுக்கு எதிராக முதன்முதலில், மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம் பால்கா் பகுதியில் கைது செய்யப்பட்ட ஷாஹீன் தாதா, ரீனு ஸ்ரீநிவாசன் என்ற இரண்டு சட்ட மாணவிகள் பொதுநல வழக்கு தொடா்ந்தனா்.

முன்னதாக, சிவசேனை தலைவா் பால் தாக்கரே மறைவைத் தொடா்ந்து மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக கருத்து பதிவிட்டதற்காக இவா்கள் இருவா் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கருத்து சுதந்திரமும், கருத்துகளை வெளிப்படுத்துவதுமே மேலானது. எந்தவொரு நபருக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்கும் அடிப்படை உரிமை மறுக்கப்படக் கூடாது’ என்று கூறி, தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ நீக்கப்படுவதாக கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தீா்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com