
வேலூர்: வேலூர் அருகே சாராய வேட்டைக்குச் சென்ற போலீசார் 2 வீடுகளில் புகுந்து 15 பவுன் நகை, ரூ.8 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக அரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உள்பட 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், அவர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே ஊசூர் குருமலையை அடுத்த நச்சிமேடு மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக அரியூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரியூர் காவல் உதவ ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் 5 போலீசார் புதன்கிழமை இரவு அந்த மலைப்பகுதியில் சாராய வேட்டை நடத்தினர்.
போலீசார் கண்டதும் சாராய வியாபாரிகள் தப்பியோடி விட்டனராம். இதையடுத்து போலீசார் மலையில் இருந்த சாராய அடுப்புகளை அடித்து உடைத்ததுடன், சாராய ஊறல்களையும் கீழே கொட்டி அழித்தனர். பின்னர் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான வெல்லம், சர்க்கரை, பட்டை உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனையிட்டனர்.
அப்போது பூட்டியிருந்த வீட்டின் பூட்டுகளை உடைத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார், அங்கிருந்த இளங்கோ, செல்வம் என்பவர்களின் வீடுகளில் கட்டுக்கட்டுடாக இருந்த ரூ.8.5 லட்சம் ரொக்கம், 15 பவுன் நகைகளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்த மலை கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு ஆளில்லாத வீடுகளின் பூட்டை உடைப்பது தவறு. 2 வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம், நகைகளை ஒப்படைக்கும்படி வாக்குவாதம் செய்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல் உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சிறிதுநேரத்துக்கு பின்னர் போலீசார் பணம், நகையை அந்த 2 வீட்டின் உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு காவல்நிலையத்துக்கு திரும்பி வந்தனர்.
மலைப்பகுதியில் சாராய வேட்டைக்கு வரும் போலீசார் வீடுகளை உடைத்து பணம், நகைகளை எடுத்து செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் அரியூர் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் தெரிவித்தனர். அவர்களிடம் பேச்சு நடத்திய வேலூர் சரக உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், பாகாயம் காவல் ஆய்வாளர் சுபா ஆகியோர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதையடுத்து, மலைக்கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன்தொடர்ச்சியாக, உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அரியூர் காவல் உதவி ஆய்வாளர் அன்பழன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகிய 3 பேர் மீது வீடு புகுந்து பீரோவை உடைத்து நகை, பணம் திருடியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக அவர்கள் 3 பேரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.