பெட்ரோல், டீசல் மீதான வரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை.
பெட்ரோல், டீசல் மீதான வரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


சென்னை: பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை; தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று  தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. கரோனா கால நிவாரணமாக இரண்டு தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்க ரூ. 9 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 

திமுக ஆட்சி அமைந்ததும் பெட்ரோல், டீசல் விலைகளை குறிப்பிட்ட அளவு குறைப்போம் என கொடுப்போம் என கொடுத்திருந்த தேர்தல் வாக்குறுதியை கூறியிருந்ததை நினைவு கூர்ந்தவர், மத்தியிலும் ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மூன்று மடங்கு வரை பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது. குறிப்பாக அவர்கள் ஆட்சிக்கு வந்த 2014 -ஆம் ஆண்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10.20 காசுகளாக இருந்த வரியை தொடர்ந்து உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.32.90 காசுகளாக உயர்த்தியுள்ளது. இதில், ரூ.31.50 காசுகளை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.1.14 காசுகள் மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. பெட்ரோல், டீசலம் மூலம் தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.336 கோடி வருவாய் குறைந்துள்ளது. ரூ.98 விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூ.70-ஐ மத்திய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ. 20 மட்டுமே கிடைக்கிறது. வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும். 

மத்திய அரசு கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை. மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை மத்திய அரசே எடுத்து கொள்கிறது. இதனால் மாநில அரசுக்கு தொடர் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்கவோ, கிடைக்கும் வரி வருவாயை முறையாக பகிர்ந்துகொள்ள முன்வரவில்லை. 

இந்த நிலையில் மாநில அரசு, பெட்ரோல், டீசல் மீது தாங்கள் விதிக்கும் வரியை குறைத்தால், அதனால் கூடுதல் இழப்பு ஏற்படுவதோடு, அது மத்திய அரசுக்கு சாதகமாகவே இருக்கும். எனவே, தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை என்றார். 

மேலும் மாநிலங்களிடம் வரியை வசூல் செய்யும் மத்திய அரசு, அதனைக் கொண்டு தங்களது ஆடம்பர திட்டங்களை நிறைவேற்றுவதில் குறியாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் வரிகளை உயர்த்தாமல், பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயம் செய்தது. அதையே தமிழ்நாட்டில் அன்றைக்கு கருணாநிதி தலைமையிலான கருணாநிதி அரசும் பின்பற்றியது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திடம் வாங்கிய வரியை விட குறைவான பங்கினையே திரும்ப கொடுக்கிறார்கள். ஆனால் குறைவான வரி செலுத்தும் உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களுக்கு அதிக பங்கினை கொடுக்கிறார்கள். இந்தநிலை தொடர்வது சரியாக இருக்காது. அதேநேரம் தமிழ்நாடு அரசின் கடன் குறித்து முந்தைய அரசு முறையான தகவல்களை வெளியிடவில்லை.

ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமான நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை உள்ளது; அந்த விவரங்கள் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு பின்னரான சில நாள்களில் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com