
மதுரை: கரோனா நோயாளிகளுக்கு அவசியத் தேவையாக உள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு ஓரிரு நாள்களில் சரியாகும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை பிரிவை வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது: கரோனா இரண்டாவது அலையின் வேகம் தீவிரமாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .அதற்கேற்ப மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். இன்றைய சூழலில் அதி முக்கிய தேவையாக இருப்பது கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய ஆக்சிஜன் மற்றும் கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியவை தான். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்தும் ஆக்சிஜன் இந்த மூன்று நாள்களுக்கு பிறகு கிடைக்கும் என தெரிகிறது. ஆகவே ஓரிரு நாள்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
அரசு என்னதான் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இன்றி கரோனாவை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே பொதுமக்கள் பொது முடக்க விதிகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணா தடுப்பு நடவடிக்கைகள் சிகிச்சை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான கட்டளை மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.