கிராம நிர்வாக அலுவலகத்தில் சாதிக் கொடுமை: கிராம நிர்வாக அலுவலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பு! 

கோவை ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபால்சாமி என்பவர் காலில் விழுந்து கிராம உதவியாளர் மன்னிப்பு கேட்கும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி.
கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி.

கோவை ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபால்சாமி என்பவர் காலில் விழுந்து கிராம உதவியாளர் மன்னிப்பு கேட்கும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் ஒன்றியம் அருகே உள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில், ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர் தனது சொத்து விவரங்களுக்கான ஆவண சரிபார்ப்புக்காக கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வியை அணுகியுள்ளார். அப்போது ஆவணங்கள் சரியான முறையில் இல்லாததால் முறையான ஆவணங்களை கொண்டுவரும்படி கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்லி கூறியுள்ளார். 

இதையடுத்து கோபமடைந்த கோபால்சாமி கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது போபால்சாமி முத்துசாமியின் சாதியைச் சொல்லியும்,   ஊரில் இருக்க முடியாது, வேலையை காலி செய்துவிடுவேன் என  தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதுடன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார். 

கோபால்சாமியின் மிரட்டலுக்கு பயந்த முத்துசாமி, மேசை மீது அமர்ந்திருந்த கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மன்னித்து விட்டதாகவும் எழுந்திரு, தன் மீதும் தவறு இருப்பதாக கோபால்சாமி கூறும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவை தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கோபால்சாமி அன்னூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் முத்துசாமி தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். 

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உதவியாளர் முத்துசாமியை, கோபால்சாமி சாதியைச் சொல்லி திட்டியதுடன் மன்னிப்பு கேட்குமாறு மிரட்டியதாக கூறப்படும் நிலையில், சாதிய வன்கொடுமை தொடர்பான புகார் எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட வருவாய் அலுவலர்,  காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இது குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்களில் நடக்கும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com