திருப்பூர்: திருப்பூரில் பாறைக்குழியில் மீன்பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பியின் நீரில் மீழ்கி உயிரிழந்தனர்.
திருப்பூர், கவுண்டன்நாயக்கன்பாளையத்தில் உள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன், இவரது மகன்கள் சத்யா(13), குமரன்(11), இவர்கள் இருவரும் நெசவாளர் காலனியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8, 6 ஆம் வகுப்பு படித்து வந்தனர். கரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
பாறைக்குழி
இந்த நிலையில், கோல்டன் நகரில் உள்ள பாறைக்குழிக்கு இருவரும் கடந்த புதன்கிழமை மாலையில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. இதனிடையே, பணி முடிந்து வந்த ராஜேந்திரன் உறவினர்கள் துணையுடன் அக்கம், பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது பாறைக்குழிக்கு மீன் பிடிக்கச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜேந்திரன் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத்துறையினர் வியாழக்கிழமை அதிகாலையில் சென்றுள்ளனர். இதன் பிறகு மின்மோட்டர் வைத்து நீரை உறிஞ்சி கயிறு கட்டி சத்யா, குமரனின் சடலத்தை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.