அதிமுகவை அபகரிக்கும் நோக்குடன் செயல்படும் சசிகலா: ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக கண்டனம்

அதிமுகவை அபகரிக்கும் நோக்குடன் செயல்படும் சசிகலாவுக்கு, ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்கிறார் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன்.
கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்கிறார் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன்.


பவானி: அதிமுகவை அபகரிக்கும் நோக்குடன் செயல்படும் சசிகலாவுக்கு, ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபுற்றது. ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ,  தீர்மானங்களை விளக்கி பேசினார். சட்டப்பேரவை  உறுப்பினர்கள் ஜெ.ஜெயக்குமார்,  பண்ணாரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் இரவு, பகல் பாராது 25,000 கிமீ தூரம் பயணித்து அயராது தேர்தல் பணியாற்றி 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 9 கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெற்றி பெற பாடுபட்ட தமிழக முன்னாள் முதல்வர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர், அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது. 

தேர்தல் முடிவுக்குப் பின் மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கினைப் பார்த்து கட்சியை அபகரிக்கும் நோக்கில் கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா,  ஜாதி உணர்வைத் தூண்டும் விதத்திலும், கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் சிலருடன் தொலைபேசியில் பேசுவதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சசிகலாவிற்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்போ, சம்பந்தமோ இல்லை எனவும் தீர்மானிக்கப்படுகிறது. 

அதிமுகவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் கூட்டத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற பாடுபட்ட நிர்வாகிகள் மற்றும்  வாக்களித்த வாக்காளர்களுக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது. 

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் கனவுத் திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளை மீண்டும் துரிதப்படுத்தி, விடுபட்ட குளங்களையும் சேர்த்து குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடித்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தண்ணீர் திறந்து விவசாயிகள் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஈரோடு - சத்தி இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக உடனடியாக ஆரம்பித்து குறிப்பிட்ட காலத்திற்குள் பணிமுடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் எம்பி சத்தியபாமா, மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com