காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் பிச்சாண்டவர் புறப்பாடு
By DIN | Published On : 24th June 2021 01:17 PM | Last Updated : 24th June 2021 01:17 PM | அ+அ அ- |

காரைக்கால் மாங்கனித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கோவிலுக்குள் நடைபெற்ற ஸ்ரீ பிச்சாண்டவர் புறப்பாடு.
காரைக்கால் : காரைக்கால் மாங்கனித் திருவிழாவையொட்டி, கோவிலுக்குள் ஸ்ரீ பிச்சாண்டவர் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
நாயன்மார்கள் அறுபத்து மூவரில் அமர்ந்த திருக்கோலம் கொண்டிருப்பவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார். அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோவில் உள்ளது. அம்மையார் இளம் பருவம் முதல் தீவிர சிவபக்தராக வாழ்ந்தவர்.
வணிகரான பரமதத்தரை திருமணம் செய்துகொண்டது, சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் அம்மையார் இல்லத்தில் அமுதுண்ண செல்வது, கணவர் அனுப்பிய மாங்கனியை சிவனடியாருக்கு அளித்துவிட்டு, கணவர் வந்து கேட்டபோது இறைவனிடம் வேண்டிப் பெற்றது, மனைவி இறைவனுக்கு ஒப்பானவர் எனக் கருதி பரமதத்தர் வெளியேறி, மறுமணம் செய்துகொண்டது, கணவரே தம் பாதத்தில் வீழ்ந்து வணங்கியதை ஏற்கமுடியாமல், இறைவனிடம் பேய் உருவம் வேண்டிப் பெற்றது, இறைவன் வீற்றிருக்கும் கயிலாயத்தை காலால் நடந்து செல்வது ஆகாதென்று தலைக்கீழாக கைகளை ஊன்றி சிவபெருமானை கண்டாராம் புனிதவதியார்.
இவரின் பக்தியை மெச்சும் வகையில், 63 நாயன்மாா்களில் ஒருவரான, சிவபெருமானால் அம்மையே என்ற அழைக்கப்பட்ட பெருமைக்குரியவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றையும், சிவபெருமான் மீது அவா் கொண்டிருந்த பக்தியையும் விளக்கி, ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோவில் சாா்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
நிகழாண்டு கரோனா பொதுமுடக்கத்தால், பக்தர்களின்றி கோவிலுக்குள் நடத்த புதுச்சேரி அரசு அனுமதித்ததன் அடிப்படையில், கடந்த 21-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தர்), 22-ஆம் தேதி திருக்கல்யாணம், 23-ஆம் தேதி ஸ்ரீ பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அம்மையார் இல்லத்தில் அமுதுண்ண செல்லும் நிகழ்வாக கோவிலுக்குள் சிவனடியார் கோலத்தில் பிச்சாண்டவராக சிவபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகாரம் கொண்டு செல்லப்பட்டார். அப்போது உபயதாரர்கள் மாங்கனிகளை சம்பிரதாய முறையாக இறைக்க கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மண்டபத்துக்கு எழுந்தருளிய ஸ்ரீ பிச்சாண்டவருக்கு அமுதுபடையலிட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
வழக்கமாக இந்த வைபவம் காரைக்கால் நகரில் பெருவீதியுலாவாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வீசப்படும் மாங்கனிகளை பிடித்து மகிழ்வதோடு, பக்தி பெருக்கில் அதனை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்செல்வர். கரோனா பரவல் காரணத்தால் இதற்கான அனுமதியில்லாதாதல் கோவிலிலேயே சம்பிரதாய முறையில் நடத்தப்பட்டது.
இந்த வழிபாட்டில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட், துணை ஆட்சியர் (வருவாய்) எம்.ஆதர்ஷ், கோவில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) காசிநாதன் உள்ளிட்ட உபயதாரர்கள் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...