கும்மிடிப்பூண்டியில் பழக்கூழ் தொழிற்சாலை, அரசு கல்லூரி: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோரிக்கை

கும்மிடிப்பூண்டியில் பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, அரசு கல்லூரி, சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசினார்.
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

கும்மிடிப்பூண்டி: தமிழக சட்டப்பேரவையில் கும்மிடிப்பூண்டியில் பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, அரசு கல்லூரி, சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசினார்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினரான டி.ஜெ.கோவிந்தராஜன், பேரவையில் தனது கன்னிப்பேச்சு மூலம் கும்மிடிப்பூண்டி தொகுதியின் வளர்ச்சி திட்டங்கள் தேவைகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். 

அதன்படி, பேரவையில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கடந்த ஆட்சியில் கும்மிடிப்பூண்டி அடுத்த பொன்னேரி வல்லூரில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி  மாயமானது,  பெரியபாளையம் அருகே கொசஸ்தலை  ஆற்றின் குறுக்கே ரூ.38 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பு விழா காணும் முன்னே புயல் மழைக்கு சேதமடைந்ததை சுட்டிக்காட்டி பேசியவர், தரமற்ற முறையில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரரை சேதமுற்ற அணையை செப்பனிட செய்ய உத்தரவிடாமல், அந்த சேதத்தை சரி செய்ய ரூ.18 கோடி நிதி ஒதுக்கி மக்கள் வரி பணம் வீணாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர் கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 400 தொழிற்சாலைகள் உள்ள நிலையில் கும்மிடிப்பூண்டியில் நிலம், நீர், காற்று மாசடைந்து காணப்படுகிறது. இந்த சூழலில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்கிற மருத்துவ, ரசாயன, தொழிற்சாலை கழிவுகளை சேகரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அங்கு மலை போல கழிவுகள் குவிக்கப்பட்டு சுற்றுசூழலை பாதித்து உள்ளதால், அந்த தொழிற்சாலையின் இரண்டாம் அலகு செயல்பட உள்ளதால் கும்மிடிப்பூண்டி பகுதி மக்களின் நலன் கருதி அந்த தொழிற்சாலையின் இரண்டாம் அலகை தடுத்து நிறுத்திட வேண்டும், தொழிற்சாலைகள் கழிவு நீரை சாலையோரங்களில் கொட்டி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கும்மிடிப்பூண்டியில் கழிவு நீரை மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அரசு கல்லூரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி அமைத்து தர வேண்டும் என்றும், அயநெல்லூர், நம்பாக்கம், பூவலை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்றும், திருக்கண்டலம் மாம்பாக்கம், பாலவாக்கம், மாலந்தூர் ஆகிய பகுதிகளில் உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் சூழலில் பள்ளியை பிரித்து அந்த பகுதியில் மகளிர் மேல்நிலைப்பள்ளியை கொண்டு வரவேண்டும் எனவும், தேர்வாய், கீழ்முதலம்பேட்டில் ஆதிதிராவிடர் நல பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன், விதைகள் தருவது  உதவி உபகரணங்கள் தர வேண்டும் என்றும், கும்மிடிப்பூண்டியில் அதிக அளவு மாந்தோப்புகள் உள்ள நிலையில் மா பயிரிடும் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட கும்மிடிப்பூண்டியில் பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்திடவும், மாதர்பாக்கம், பாதிரிவேடு, மாநெல்லூர், புதுகும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, ஆரணி உள்ளிட்ட பகுதிளில் அதிக அளவு நெசவாளர்கள் உள்ள நிலையில் அவர்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், பட்டு கூட்டுறவு சங்கத்தின் மூலம் அவர்களுக்கு கடனுதவி வழங்கிட வேண்டும், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில் மல்லி, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவு பயிரிடுவதால் அங்கு சென்ட் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அவ்வாறே கும்மிடிப்பூண்டி தொகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாய்  வசித்து வரும் மக்களுக்கு பட்டா இல்லாத நிலையில் சிறப்பு முகாம் அமைத்து ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கும்மிடிப்பூண்டியில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத பல கட்டடங்கள் உள்ளதால், அந்த கட்டடங்களை மாவட்ட மருத்துவமனையாக பயன்படுத்த வேண்டும் எனவும், கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியாக உள்ளதாலும், அதனை சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களாக இருப்பதாலும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் தேவை எனவும் கேட்டுக்கொண்டார்.

அதே போல அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்-சேய் நல பிரிவில் ஒப்பந்த பணியாளர்களாக ஆர்சிஎச் என்கிற ஊழியர்கள் வெகு குறைந்த சம்பளத்தில் பணி செய்து வரும் நிலையில் அவர்களது ஊதியத்தை அதிகப்படுத்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புதுவாயல் பகுதியில் கருணாநிதி ஆட்சி காலத்தில் சர்க்கரை ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட70 ஏக்கர் நிலத்தில் இதுவரை சர்க்கரை ஆலை அமைக்கும் பணிகள் நடைபெறாத நிலையில், கும்மிடிப்பூண்டியில் அதிக அளவு கிழங்குகள் பயிரிடுவதை கருத்தில் கொண்டு அங்கு ஜவ்வரிசி தொழிற்சாலை அமைத்தால், பலர் வேலை வாய்ப்புகளை பெறும் நிலை ஏற்படும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிக அளவு நெல் பயிரிடும் நிலையில் கும்மிடிப்பூண்டியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவ்வாறே சிப்காட் தொழிற்பேட்டையில் 75 சதவீதம் பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூரில் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரி செய்ய கண்காணிக்க பலதுறை, பொது நல அமைப்புகள் கலந்த கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com