கடனாநதி அணை அருகே கரடி தாக்கியதில் 3 பேர் காயம்

கடனாநதி அணை அருகே கரடி தாக்கியதில் வியாபாரி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
மறியலில் ஈடுபட்ட பெத்தான் பிள்ளைக் குடியிருப்பு கிராம மக்கள்.
மறியலில் ஈடுபட்ட பெத்தான் பிள்ளைக் குடியிருப்பு கிராம மக்கள்.

கடனாநதி அணை அருகே கரடி தாக்கியதில் வியாபாரி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் சரகத்திற்குட்பட்டது கடனாநதி அணை அடிவார கிராமமான பெத்தான் பிள்ளைக்குடியிருப்பு. மலையடிவார கிராமமானதால் வனப்பகுதியிலிருந்து சிறுத்தை, கரடி, யானை, மான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து நாய், ஆடு,மாடு உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளைத் தாக்கித் தூக்கிச் செல்வதோடு பயிர்களையும் அழித்து நாசமாக்கி வருகின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கடையம் அருகே உள்ள கலிதீர்த்தான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டமணி என்பவர் பெத்தான் பிள்ளைக் குடியிருப்பில் உள்ள கடைகளுக்கு மாசாலாப் பொருள்கள் கொண்டு சென்றுள்ளார். அப்போது கிராமத்தில் நுழையும் நேரத்தில் சாலையோரத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று வைகுண்டமணி மீது பாய்ந்த தாக்கியுள்ளது. அப்போது அங்கு வந்த பெத்தான் பிள்ளைக்குடியிருப்பைச் சேர்ந்த பச்சாத்து மகன்கள் நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோர் கரடியை விரட்டியுள்ளனர்.

ஆனால் கரடி அவர்கள் மீதும் பாய்ந்து தாக்கியுள்ளது. மேலும் அந்த வழியாக வந்தவர்கள் தகவல் கொடுத்ததையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்து கரடியை விரட்டியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்த கடையம் வனச்சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர் கரடி தாக்கியதில் காயம்பட்ட மூவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மலையடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்வேலி, அகழி உள்ளிட்டவை பயனற்ற வகையில் உள்ளன.

தொடர்ந்து வன விலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க நிரந்தர தடுப்பு அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தியும் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாகியுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையடிவார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே வனத்துறையைக் கண்டித்து பெத்தான் பிள்ளைக் குடியிருப்பு கிராம மக்கள் கடையம் வனச்சரக அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டுள்ளனர். 20 நாட்களுக்கு முன் கோட்டை விளை பட்டி கிராமத்தில் ஒரு பெண்ணை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com