காரைக்காலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம்!
By DIN | Published On : 02nd October 2022 05:05 PM | Last Updated : 02nd October 2022 05:05 PM | அ+அ அ- |

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்த கு.அரங்கநாதாச்சாரிய சுவாமிகள்.
காரைக்கால்: விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தோர் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், நவ.6-இல் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதியளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அதே நாளில் காரைக்கால் மாவட்ட ஆர்எஸ்எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி, நாட்டின் 75-ஆவது சுதந்திரநாள் கொண்டாட்ட நிறைவு மற்றும் விஜயதசமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற்றது.
இதையும் படிக்க | சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரிச் சலுகை நீட்டிப்பு!
இதன்படி, காரைக்கால் கோயில்பத்து பகுதியிலிருந்து அரசலாறு பாலம் அருகே உள்ள சிங்காரவேலர் சிலை வரை காரைக்கால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட அணிவகுப்பு ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, ஊர்வலத்தை சிறப்பு அழைப்பாளராக கு.அரங்கநாதாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
அணிவகுப்பாக சென்ற சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்
பேண்டு வாத்தியக் குழுவினர் முன்னே செல்ல, சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுப்பாக சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட செயலர் சிவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.