இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்! சந்திரயானும், பிரக்ஞானந்தாவும்...

ஒருபுறம் நிலவின் தென் துருவத்தில் முதலில் காலடி எடுத்துவைக்கும் சந்திரயான் -3.  மறுபுறம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை எட்டிப்பிடிக்க போராடும் இளம் வீரர் பிரக்ஞானந்தா. 
கோப்புப் படங்கள்
கோப்புப் படங்கள்

இந்திய வரலாற்றில் ஆகஸ்ட் 23  வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறவுள்ளது. 

ஒருபுறம் நிலவின் தென் துருவத்தில் முதலில் காலடி எடுத்துவைக்கும் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர், மறுபுறம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை எட்டிப்பிடிக்க போராடும் இளம் வீரர் பிரக்ஞானந்தா. 

இந்த இரு வரலாற்று நிகழ்வுகளுமே இன்று (ஆக.23) ஒரே நாளில் நடக்கவுள்ளது. இந்த இரண்டிலும் நினைத்தபடி வெற்றியை எட்டினால், உலகத்தின் அனைத்து நாடுகளின் செய்திகளிலும் நாளைய தலைப்புச் செய்தி இந்தியாவாகத்தான் இருக்கும்.

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு தடம் பதிக்கவுள்ளது.

விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் தேசமாக இந்தியா உருவெடுக்கும்.

அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்தன. ஆனால், அவை எவ்வித ஆக்கப்பூர்வ பலனையும் அளிக்கவில்லை. 

நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தது இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம்தான். சந்திரயான் -2 இறுதிக்கட்டத்தில் தோல்வியடைந்தது. தற்போது அந்தத் தோல்வியின் பாடங்களிலிருந்து உருவாக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் நிலவின் அருகில் தற்போது பயணித்து வருகிறது. இன்று மாலை நிலவில் கால் பதிக்க காத்திருக்கிறது. 

இதேபோன்று மறுபுறம் பிரக்ஞானந்தா. தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, உலகக்கோப்பை செஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற 2வது வீரராவார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் அந்த சாதனையைச் செய்துள்ளார். தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று விளையாடி வருகிறார் பிரக்ஞானந்தா. 

அதுவும் உலகின் முதல் நிலை வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் உடன் மோதிவருகிறார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தை போராடி சமநிலையில் (டிரா) முடித்தார் பிரக்ஞானந்தா. தற்போது இறுதிப்போட்டியின் 2வது சுற்றில் விளையாடி வருகிறார். 

இதில் சமநிலை இடத்தை எட்டினால்,  ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகின் வளர்ந்த நாடுகள்கூட எட்டாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான் -3 எட்டிப்பிடிக்குமா? உலகின் முதல் நிலை வீரரை எதிர்கொண்டுவரும் பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வாரா? இந்த நாள் இந்தியாவின் வரலாற்று நாளாக மாறுமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com