
ஆலங்குளம்: ஆலங்குளத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
ஆலங்குளம் அம்பை சாலை பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் சரண் (21). இவர் தந்தையின் காய்கனி கடையில் உதவியாக இருந்து வந்தார். கடைக்கு சில பொருட்கள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை காய்கனிச் சந்தைக்கு தனது பைக்கில் சென்றுள்ளார்.
ஊர் மடை அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் சென்றபோது அருகில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆலங்குளம் தனியார் மருத்துவமனையில் முதல் உதவிக்கு பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | குறைந்துவரும் நீரா பான உற்பத்தி!
நான்கு வழிச்சாலை பணியில் மந்தம் காரணமாக விபத்து: திருநெல்வேலி தென்காசி நான்கு வழி சாலை பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும் என நெடுஞ்சாலை துறையால் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 60 சதவீத வேலைகளே நிறைவு பெற்றுள்ளது.
பணிகள் நடைபெறும் இடத்தில் தடுப்புச் சுவர்களோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படாத காரணத்தால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
விபத்துக்களை தடுக்க சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.