பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூலை 15ல் மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம்: புதிய தமிழகம் அறிவிப்பு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தமிழக முழுவதும் உள்ள மதுபான கடைகள் முன்பாக பெண்கள் தலைமையில் மதுபான பாட்டில்களை உடைக்கும் போராட்டம் வரும் 15 ஆம் தேதி நடைபெறும்
கோப்புப்படம்
கோப்புப்படம்


திருநெல்வேலி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தமிழக முழுவதும் உள்ள மதுபான கடைகள் முன்பாக பெண்கள் தலைமையில் மதுபான பாட்டில்களை உடைக்கும் போராட்டம் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக திருநெல்வேலி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இரண்டாவது கட்டமாக தமிழகம் முழுவதும் 100 பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டு கடந்த ஆறாம் தேதி முதல் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பாக பெண்கள் தலைமையில் மது பாட்டில்களை உடைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் ஏராளமான மது கடைகள் உள்ளதால் இந்தப் போராட்டம் இரண்டு, மூன்று கட்டங்களாக நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் ஒட்டுமொத்த தமிழக பெண்களையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும். 

2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் முதல் கையெழுத்திடப்படும் என கூறினர். ஆனால் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதை செய்யவில்லை. பூரண மதுவிலக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போல் தமிழகத்தில் உள்ள குடும்பப் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்படும் என கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அறிவித்தது. அதுதான் அவர்களுக்கு கூடுதல் வாக்கையும் பெற்று தந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என அனைத்து பெண்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது அந்த திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.
  
ஆண்டுக்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்திற்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்கிறார்கள். இதன் மூலம் 100 பேரில் 99 பேருக்கு உதவித் தொகை கிடைக்க வாய்ப்பில்லை. பெண்கள் யாரும் மாதந்தோறும் ரூ.1000 வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. மக்களின் வாக்குகளை பெறுவதற்காக திமுக இந்த வாக்குறுதியை அறிவித்தது. அந்த வாக்குறுதியை திமுக காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் வரக்கூடிய மக்களவைத் தேர்தலை திமுக எதிர்கொள்ள முடியாது. பெண்களிடம் வாக்கு கேட்கும் உரிமையை திமுக இழந்து விடும். 

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான நில ஆர்ஜித நடவடிக்கைக்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. வாய்ச்சவடால் மட்டுமே பேசுகிறது. 

ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரில் ஏழு டிஎம்சி தண்ணீரை குறைவாகவே தந்துள்ளது. இதற்கிடையே மேகதாது அணை கட்டினால் வறட்சி காலத்தில் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய நீர் கிடைக்காமல் போய்விடும். 

திமுகவிற்கு ஆட்சியா? மக்கள் நலனா? என்றால் ஆட்சி தான் முக்கியம். அவர்கள் ஆட்சியை தக்க வைப்பதற்காக தமிழகத்தின் நலனை பலமுறை காவு கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தின் உரிமை போனாலும் பரவாயில்லை. காங்கிரஸ் உடனான கூட்டணி தான் வேண்டும் என திமுக நினைக்கிறது. பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் மாநாட்டில் மேகதாது அணை விவகாரத்தை காரணம் காட்டி தமிழகம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க கூடாது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தின் செயலை திமுக வெளிப்படையாக கண்டிக்க வேண்டும். 

மகளிர் உரிமை தொகை வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் மக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கிருஷ்ணசாமி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com