இஸ்ரேலில் தாக்குதலுக்கு பலியான 10 நேபாள இளைஞர்கள்

இஸ்ரேல் நாட்டில் மேற்படிப்புக்காக சென்றிருந்த வேளாண் பட்டதாரி மாணவர் தாக்குதலில் பலியான செய்தி அவரது குடும்பத்திற்கு மீளா சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
இஸ்ரேலில் தாக்குதலுக்கு பலியான 10 நேபாள இளைஞர்கள்
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் நாட்டில் மேற்படிப்புக்காக சென்றிருந்த வேளாண் பட்டதாரி மாணவர்
உள்பட 10 இளைஞர்கள் தாக்குதலில் பலியான செய்தி அவர்களது குடும்பத்திற்கு மீளா சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக நாடுகளையே அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன தொடர் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் தங்கியிருந்த நேபாளத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் பலியாகி இருப்பதை இஸ்ரேலிய காவல் துறை உறுதி செய்திருக்கிறது. அதில் ஒருவர் ஆனந்த் ஷா.

இளங்கலை வேளாண் படிப்பு முடித்த இவர் இஸ்ரேல் அரசால் நடத்தப்படும் படித்துக்கொண்டே சம்பாதியுங்கள் (Learn and Earn) என்கிற திட்டத்தின் கீழ் 10 மாதங்கள் மேற்கொண்டு படிக்க இஸ்ரேல் சென்றிருந்தார்.

ஆனந்த் ஷாவின் தந்தை சோமன் ஷா பேசும் போது, "மேற்படிப்புக்காக ஆனந்த் இஸ்ரேல் சென்றிருந்தான். இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 50 பேரில் என் மகனும் ஒருவர். படிப்பிற்கான விண்ணப்பம், விசா, விமான சீட்டு இப்படி எதற்கும் பணம் கட்ட தேவையில்லை. எனினும் தனிப்பட்ட செலவுகளாக 3 இலட்சம் நிலத்தின் மீது கடன் வாங்கி படிக்க அனுப்பி இருந்தோம். நான் சாதாரண விவசாயி" எனக் கூறினார்.

இஸ்ரேல் விவசாயத்தைப் பற்றி கற்று கொள்ள சிறந்த நாடு, அங்கு கற்றுகொண்டதை நம் நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும் என ஆனந்த் நம்பிக்கை கொண்டிருந்ததைச் சோகத்தோடு நினைவு கூறுகிறார் சோமன் ஷா.
 
நேபாள அரசிடமிருந்தோ அல்லது ஆனந்த் படிக்கச் சென்ற கல்வி நிறுவனத்திடமிருந்தோ இதுவரை எந்த செய்தியும் ஆனந்த்தின் தந்தைக்கு கிடைக்கவில்லை.

ஆனந்த் உடன் சேர்த்து 10 நேபாளிய மாணவர்கள் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போர் சூழலில் அங்கு கல்வி கற்கச் செல்கிற மாணவர்கள், தொழிலாளர்கள் தான் முதலில் பாதிக்கப்படுகிறவர்களாக உள்ளார்கள்.

நேபாள அரசு இஸ்ரேல் நாட்டில் வாழும் நேபாள மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர தங்கள்  இணையதளத்தில் பதிவுசெய்ய அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com