கூடங்குளத்தில் இழுபறியில் மிதவைக் கப்பல்! என்ன நடந்துகொண்டிருக்கிறது?

கூடங்குளத்துக்கு நீராவி எந்திரங்களை ஏற்றிவந்த  மிதவைக் கப்பலை மீட்கும்  முயற்சி தோல்வியுற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அணுமின் நிலைய பாதுகாப்பு பற்றி எச்சரித்திருக்கிறார் சுப. உதயகுமார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே பாறையில் மோதி நிற்கும் மிதவைக் கப்பல்
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே பாறையில் மோதி நிற்கும் மிதவைக் கப்பல்

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நீராவி எந்திரங்களை ஏற்றிவந்த  மிதவைக் கப்பலை மீட்கும்  முயற்சி தொடர்ந்து தோல்வியுற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு பற்றி எச்சரித்திருக்கிறார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சுப. உதயகுமார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"இந்தியாவின் தென்கோடியில் இன்னொரு விரயச் செயல் அரங்கேறியுள்ளது.

கணக்கு வழக்கின்றி இந்திய மக்களின் வரிப்பணத்தை ரஷியாவுக்கு வாரிவாரி வழங்கும் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு ரஷியாவிலிருந்து இரண்டு நீராவி உற்பத்தி இயந்திரங்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாகக் கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து கூடங்குளத்துக்கு கடல் வழியாக அவற்றை இழுத்துவந்தபோது, அந்த மிதவைக் கப்பல் அணுமின் துறைமுகத்தில் தரைதட்டி கடலில் சிக்கிக் கொண்டது.

ஒரு சாதாரண சரக்குக் கப்பலைக் கையாள முடியாமல் இந்திய அரசின் அணுசக்தித் துறை திணறியது.

பின்னர் மும்பையிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் “நிபுணர்கள்” வந்தார்கள், சென்றார்கள். அதன் பிறகு இலங்கையிலிருந்து ஓர் இழுவைக் கப்பலைக் கொண்டுவந்து மிதவைக் கப்பலை இழுத்தார்கள்.

அதன் இழுதிறன் குறைவாக இருந்ததால் இன்னொரு இழுவைக் கப்பலையும் இலங்கையிலிருந்து கொண்டு வந்தார்களாம். எதுவும் நடக்காத நிலையில், ஏறத்தாழ 670 கோடி ரூபாய் விலையுள்ள சரக்கை அப்படியே விட்டுவிட முடியாமல், கடலில் ஹைவே போட முடிவெடுத்தார்கள்.

யாரிடமும் கணக்குக் காட்ட வேண்டியதில்லை. நாடாளுமன்றத்தில்கூட எந்த விவாதமும் கிடையாது. தேசியப் பாதுகாப்பு விஷயம் என்று சொல்லிவிட்டால், எதிர்க்கட்சிகள்கூட எதுவும் பேசமாட்டார்கள். யாருக்கும் எந்த விதத்திலும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய தேவை இல்லாததால், நிறுவனம் ஒன்றுக்கு கடலில் ரோடு போட அனுமதி கொடுத்தார்கள். நிறுவனம் சொல்வதுதான் செலவுக்  கணக்கு.

கடல் ஹைவே வேலைகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இது வெறுமனே கடலில் கல்லையும் மண்ணையும் போட்டு நிரப்பும் சாதாரண சாலை அல்ல. ‘ஆக்சில் டிரக்’ எனப்படும் சுமார் நூறு டன் எடைகொண்ட, ஐம்பது, அறுபது சக்கரங்களுடைய, மிக நீண்ட கனரக வாகனம் செல்லும் சாலை. சுமார் 300 டன் எடையுள்ள சரக்கை ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் மிகவும்  உறுதியான சாலையாக இது இருக்க வேண்டும்.

சுப. உதயகுமார்
சுப. உதயகுமார்

கடலில் கிடக்கும் ரஷிய சரக்கைத் தூக்கி ‘டிரக்’கில் ஏற்றுவதற்கு கிரேன் ஏற்பாடு செய்ய வேண்டும். கூடங்குளம் வளாகத்தில் இருக்கும் கிரேன் ஒன்றைப் பிரித்து கூடங்குளம் மினி துறைமுகத்தில் போடப்படும் கடல் ஹைவே பகுதியில் நிறுவுவதற்கு பதினைந்து நாட்கள் வரை ஆகுமாம்.

இதற்கிடையே மிதவைக் கப்பலில் உள்ள சுமார் இருபது உள்ளறைகளில் எட்டு அறைகள் உடைந்து, கப்பல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தரைதட்டிய அன்று இரண்டு அறைகள் மட்டுமே உடைந்தன. கூடங்குளம்  நிபுணர்கள் அவற்றைப் பற்றவைத்து பழுதுநீக்கி விடலாம் என்று நினைத்த கதை நடக்கவில்லை.

ஒருவேளை இவ்விரண்டு நீராவி உற்பத்தி இயந்திரங்களும் கடலுக்குள் விழுந்து மூழ்கிப் போனாலும் கவலை இல்லை, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடுக் கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறது. எந்த கம்பெனியில் எவ்வளவு தொகைக்குக் காப்பீடு செய்திருக்கிறார்கள், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் என்னென்ன என்றெல்லாம் யாரும் கேள்விகள் கேட்க முடியாது.

அப்படியாக கடல் ஹைவே திட்டமும் தோல்வியுற்றால் மேற்படி இரண்டு நீராவி உற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் தயாரிக்க ரஷியாவுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுமாம். அப்படியானால் கூடங்குளம் 5 - 6 அணுஉலைகள் கட்டுமானத்தில் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக தாமதம் நிகழுமாம்.

இதனாலென்ன, தொடர்புடைய அனைவரும் இன்னும் இரண்டு ஆண்டுகள்  கழிக்கலாம். இந்திய மக்களின் பணம் படும் பாடு புரிகிறதா? பணவிரயம் என்பதன் இன்னொரு பெயர்தான் அணுசக்தி.

இந்திய அணுசக்தித் துறைக்கும் வெளிப்படைத் தன்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மூடிமறைப்பதும், சிக்கலான நேரங்களில் எதையாவது அரைகுறையாகச் சொல்வதும் இந்தத் துறையின் கலாசாரமாக இருந்து வருகிறது.

இப்போதும் அப்படித்தான் நடக்கிறது. இதுவரை கூடங்குளம் மிதவைக் கப்பல் விவகாரம் பற்றி யாரும், எதுவும் முழு உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.

நாளை கூடங்குளத்தில் ஏதாவது அசம்பாவிதம் சம்பவித்தால் என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதை அனைவரும் அறிந்துகொள்வதற்காக இயற்கை  அனுப்பியிருக்கும் சமிக்ஞைதான் இந்த இழுவைக் கப்பல் இழுபறி.

இவர்களின் “உலகத்தரம் வாய்ந்த” கூடங்குளம் அணுஉலை எவ்வளவு திறம்பட இயங்குகிறது, அங்கே அணுக்கழிவுகள் எப்படி கவனமாகக் கையாளப்படும் என்பதெல்லாம் இப்போது மக்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார் சுப. உதயகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com