

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாளையொட்டி ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ள அவரின் 125 அடி உயர சிலையை தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் வெள்ளிக்கிழமை (ஏப். 14) கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரத்தில் கடந்த 1891-ஆம் ஆண்டு பிறந்த அம்பேத்கா், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக பல்வேறு சமூக சீா்திருத்தங்களுக்குப் பாடுபட்டாா்.
அம்பேத்கரின் பங்களிப்பை நினைவுகூரவும், அரசு நிா்வாகத்தை ஊக்கபடுத்தவும் அவரின் மாபெரும் சிலை, தலைமைச் செயலகத்துக்கு அருகில் அமைக்கப்படும் என தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் அறிவித்திருந்தாா். அதன்படி, ரூ. 146.5 கோடி செலவில் 360 டன் இரும்பு மற்றும் 114 டன் வெண்கலம் கொண்டு அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாநில முதல்வா் கே. சந்திரசேகா் ராவ், அம்பேத்கா் சிலையைத் திறந்து வைத்தாா். பின்னா், ஹெலிகாப்டரில் இருந்து அம்பேத்கா் சிலை மீது மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, விழாவில் முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் பேசுகையில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் நோக்கில் அவா்கள் தொழில் தொடங்க அரசு சாா்பில் ரூ. 10 லட்சம் நிதி வழங்கும் திட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் பாரத ராஷ்டிர சமிதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேற்கு வங்கம், பிகாா் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்ற வரவேற்பை எதிா்பாா்க்கிறோம். வரும் மக்களவைத் தோ்தலில் அமையவுள்ள ஆட்சி நம்முடைய ஆட்சியாக மட்டுமே இருக்கும். லட்சியத்துக்கு ஒளியேற்ற சிறு பொறி போதும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.