
வாழப்பாடி: சேலம் மாவட்டம்,வாழப்பாடி அருகே கிராமம் மற்றும் குடும்ப நன்மைக்காகவும், வறட்சி நீங்கி, மழை பொழிந்து மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி, வயதில் மூத்த கைம்பெண்களுக்கு சுமங்கலி பெண்கள் பாத பூஜை செய்து, அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடும் வினோத நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
வாழப்பாடி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கிராம மக்களின் நன்மைக்காகவும்,வறட்சி நீங்கி செல்வ செழிப்பு, மழை பொழிந்து மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி, இந்த பகுதி மக்களின் காவல் தெய்வமான மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தும், சிறுதானிய கூழ் ஊற்றி வழிபடுவதையும், வயதில் மூத்த கைம்பெண்களை அம்மன் சன்னதியில் வரிசையாக நிற்க வைத்து, சுமங்கலி பெண்களும், சிறுவர்- சிறுமியரும் பாத பூஜை செய்து, தாம்பூலம் கொடுத்து வினோத பூஜை நடத்துவதை வழக்கமாக தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுப்பாளையம் கிராமத்தில் ஆடி பௌா்ணமியையொட்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது, வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டியும், மக்கள் நல்வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டியும், வயதில் மூத்த கைம்பெண்களை வரவழைத்து, சுமங்கலி மங்கலி பெண்களும், சிறுவர்- சிறுவர்களும் பாத பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.
கணவனை இழந்து தனியாக வாழும் விதவைப் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், கிராமத்திற்கும் குடும்பத்திற்கும் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடர்வதாலும், ஆண்டுதோறும் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை நடத்தும் விழாவை, முன்னோர்கள் வழியில் தொடர்ந்து நடத்தி வருகிறோம் என ஊா் கரக்காரா் பன்னீா்செல்வம் மற்றும் விழாக்குழுவினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.