பென்னாகரம்: ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோரத்தில் தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்கள், ஆற்றில் குளிக்க அனுமதி இல்லாததால் வாளியில் நீரை எடுத்து கரையோரத்தில் அமர்ந்தபடி நீராடினர்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாதம்தோறும் அமாவாசை நாள்களில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்க்கு ஏராளமானோர் வந்து செல்லுகின்றனர்.
தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 75,000 கன அடியாக உள்ளது. காவிரி ஆற்றில் தொடர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக கடந்த 20 நாள்களாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், ஆடி அமாவாசையான ஞாயிற்றுக்கிழமையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா வாகனத்தின் மூலம் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அவர்களை காவல் துறையினர் பென்னகரம் அருகே மடம் சோதனை சாவடி பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இருப்பினும் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் பேருந்தின் மூலம் ஒகேனக்கல் வந்திருந்த நிலையில், தர்ப்பணம் செய்யும் இடமான முதலைப் பண்ணை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குவிய தொடங்கினர்.
தடை உத்தரவின் காரணமாக அனுமதி இல்லை என போலீஸார் அறிவுறுத்திய நிலையில், ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து தர்ப்பணம் செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் முதலைப் பண்ணை, நாகர்கோவில் பகுதியில் காவல் துறையினரின் பாதுகாப்போடு தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும் காவிரி ஆற்றில் நீராட தடை விதிக்கப்பட்டதால், தர்ப்பணம் செய்துவிட்டு பொதுமக்கள் கரையோரத்தில் அமர்ந்தபடி பிளாஸ்டிக் வாளியில் நீரை எடுத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் குளித்துச் சென்றனர்.