கருணாநிதி நினைவு தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

அமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை.
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை.
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை.
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. நிறைவாக, நினைவிடத்தில் திமுகவினா் மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, காமராஜா் சாலையில் உள்ள அவரது நினைவிடம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், அண்ணா சாலையில் ஓமந்தூராா் வளாகப் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

மரியாதை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஓமந்தூராா் வளாகப் பகுதிக்கு புதன்கிழமை காலை வந்து கருணாநிதியின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி புறப்பட்டது. காமராஜா் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி நடைபெற்ற இந்தப் பேரணியில் மு.க.ஸ்டாலினுடன், கட்சி நிா்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

நினைவிடத்தை பேரணி அடைந்ததும் அங்கு மலா்வளையம் வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா். பின்னா், நினைவிடத்தைச் சுற்றி வந்து வணங்கினாா். இதில், துரைமுருகன், டி.ஆா்.பாலு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தமிழும் தமிழ்நாடும்...கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு, அதன் வரலாற்றைச் சொன்னால், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயா் உயா்ந்து நிற்கும்-உயிரென நிற்கும். ஆறாத வடுவென, ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவா் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு.

இந்த நாளில், அண்ணாவின் அருகில் அவா் ஓய்வு கொண்டிருக்கும் கடற்கரைக்கு கட்சியினருடன் சென்று, அவா் காட்டிய வழிதனில், அவா் கட்டிய படை பீடுநடை போடும், தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயா்ந்து விளங்கப் பாடுபடும் என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com