அருள்நிதியின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களுடன் பேசும்போது 2062ல் அது குறித்து யோசிக்கலாம் என்று நகைச்சுவையாக பதல் அளித்துள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் டிமாண்டி காலனி பாகம் 2 திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் திரைப்பட குழு பிரமோசன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படக்குழுவினர்களான நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன், முத்துகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதே நாளில் இதரப் படங்களும் வெளியாவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த நடிகர் அருள்நிதி, வேண்டுமென்றே அந்த நாளில் இந்தப் படத்தை வெளியிடவில்லை எனவும் அந்நாளில் வெளியாகும் அனைத்துப் படங்களுமே வெற்றிப் பெற வேண்டுமென கூறினார்.
அருள்நிதியின் அரசியல் வருகை குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை, 2062-ல் அது குறித்து யோசிக்கலாம். அப்போது நானும் உயிருடன் இருக்கமாட்டேன், நீங்களும் இருக்க மாட்டீர்கள்" என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.