
பிகார் மாநிலத்தில் வியாழக்கிழமை மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இடிந்து விழுந்த 14 ஆவது பாலம் இது என்று கூறப்படுகிறது.
பிகார் மாநிலம், கதிஹார் மாவட்டம் பாக்கியா சுகாய் கிராம பஞ்சாயத்து மற்றும் அதன் சுற்றுப் பகுதி மக்கள், தொகுதியின் தலைமையகமான பராரி நகருக்கு அருகில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கதிஹார் வழியாக சென்று வருவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து கங்கை நதியின் மீது மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, ஊரகப் பணிகள் துறை மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியின் மீது பாலம் கட்டப்பட்டு வந்தது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2023 இல் முடிவடைய இருந்தது, ஆனால் கட்டுமானப் பணிகள் முடிவடையாத நிலையில் அதன் காலக்கெடு ஜூலை 2024 ஆக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலம் வியாழக்கிழமை இடிந்து விழுந்ததாகவும், பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது மாநிலத்தில் ஜூன் மாதத்தில் இருந்து இடிந்து விழும் 14 ஆவது பாலம்.
பிகாரில் பல பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களில் 12-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்து வருவதாகவும், கங்கையில் ஏற்பட்ட கனமழையால், இடிபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். “கங்கை நதியில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக, ஊரகப் பணித் துறையால் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு தூண்கள் இடிந்து விழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கதிஹார் வெள்ளக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமைப் பொறியாளர் அன்வர் ஜமால் தெரிவித்தார்.
கடந்த 30 நாள்களில் மாநிலத்தில் பல இடங்களில் கட்டப்பட்டு வந்த பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஜூன் 18 இல் அராரியா (பக்ரா நதி) பாலம், ஜூன் 22 இல் சிவன் (கண்டக் நதி), ஜூன் 23 இல் கிழக்கு சம்பாரன், ஜூன் 27 இல் கிஷன்கஞ்ச், ஜூன் 30 இல் கிஷன்கஞ்ச், ஜூலை 3 இல் சரண் (இரண்டு பாலங்கள்), ஜூலை 3 இல் சிவன் (மூன்று பாலங்கள்), ஜூலை 4 இல் கிழக்கு சம்பாரண் (இரண்டு பாலங்கள்), ஜூலை 10 இல் சஹர்சா மாவட்டத்தில் உள்ள மஹிசி கிராமத்தில் ஒரு பாலம் என பிகார் மாநிலத்தில் பல முக்கிய பாலங்கள் இடிந்து விழுந்தது. இந்த விபத்து தொடர்பாக பிகார் அரசு குறைந்தது 15 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
பிகாரில் பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வு தொடா்கதையாகியுள்ளது. தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.