
மதுரை: திருவுடையார்பட்டியில் ஆடி திருவிழா சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருவுடையார்பட்டியில் உள்ள சுயம்பு சோலை சாத்த அய்யனார் கோயில், வாழை சாத்த அய்யனார் கோயில்கள் அமைந்துள்ளன.
இந்த கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அங்கப் பிரதட்சணம், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமும் தலைக்கட்டு வரி வசூலிக்கப்படும். ஆனால் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூலிக்கப்படுவதில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தக்கால் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்னதானம் வழங்க் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்புக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, சுயம்பு சோலை சாத்த அய்யனார் கோயில், வாழை சாத்த அய்யனார் கோயில்களில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவும், போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி முகமது சபீக் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் மாரீஸ்குமார் ஆஜரானார். மாற்று சமூகத்தினர் தரப்பில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்யப்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி முகமது சபீக், சுயம்பு சோலை சாத்த அய்யனார் கோயில் ஆடித் திருவிழாவில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக பங்கேற்க வேண்டும் என்றும், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், உரிய அதிகாரியை நியமித்து விழாவை கண்காணிக்க வேண்டும். தலைக்கட்டு வரி வசூலில் எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரிடமும் வசூல் செய்து ஆடித் திருவிழா சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.