சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபா் சவுக்கு சங்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிா்த்து அவரது தாயாா் கமலா, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு வழக்கு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை(ஆக. 6) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஐய்யப்பராஜ், ‘சவுக்கு சங்கரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது உள்நோக்கம் கொண்டது. அதை ரத்து செய்ய வேண்டும்’ என்றாா். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ்திலக் ஆஜராகி, அவதூறாகப் பேசி வரும் சவுக்கு சங்கரை எச்சரிக்கை செய்யும் விதமாகவும், அவா் திருந்த வேண்டும் என்பதற்காகவும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்று வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அதற்காக அவரை எத்தனை நாள்கள் சிறையில் அடைத்து வைத்து இருப்பீா்கள்?’ என்று கேள்வி எழுப்பினா். ‘குறைந்தது ஓா் ஆண்டு’ என்று ராஜ்திலக் பதில் கூறினாா்.
அதற்கு நீதிபதிகள், ‘அரசு நடவடிக்கையில் முறைகேடு என்று ஊடகவியலாளா்கள் சொன்னால், அதை அரசு திருத்திக் கொள்ள வேண்டும். அதற்காக யூடியூபா்கள், ஊடகத்தினரின் கழுத்தை நெறிக்கும் விதமாக இதுபோன்ற சட்டத்தை பயன்படுத்தக்கூடாது’ என்றனா். மேலும், பல கருத்துகளைக் கூறிய நீதிபதிகள் இந்த ஆட்கொணா்வு வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று(ஆக. 9) இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடகிய அமர்வு, யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.