
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவண்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார்.
இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச்சுடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் சி. பழனி பார்வையிட்டார்.
பின்னர் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை, வனத்துறை வீரர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், இளம்செஞ்சிலுவைச் சங்கம், சாரண -சாரணீய இயக்க மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் பழனி ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார். பின்னர் முன்னாள் படைவீரர் நலன், தாட்கோ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண், தோட்டக்கலை, மகளிர் உரிமைத் துறை என பல்துறைகளின் சார்பில் 224 பயனாளிகளுக்கு ரூ.1,09 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சி. பழனி வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றியமைக்காக பல்துறைகளைச் சேர்ந்த 295 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சி. பழனி வழங்கினார்.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் எம்எல்ஏக்கள் விழுப்புரம் இரா. லட்சுமணன், மயிலம் ச.சிவக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேசுவரி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.