இபிஎஸ் வியூகம் அடிப்படையில் 2026 பேரவைத் தேர்தலை சந்திப்போம்: தீர்மானம் நிறைவேற்றம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழிகாட்டுதலில் 2026 பேரவைத் தேர்தலை சந்திப்பது என அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழிகாட்டுதலில் 2026 பேரவைத் தேர்தலை சந்திப்பது என அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் அக் கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை (ஆக.16) 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக, தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமி ஜூலை மாதம் ஆலோசனை நடத்தினாா். அப்போது, மக்களவைத் தோ்தலில் வலுவான கூட்டணி அமைக்காததால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும், சட்டப்பேரவையில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்றும் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்திற்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கூட்டத்தில் பங்கேற்றார்.
இன்றைய கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழிகாட்டுதலில் 2026 பேரவைத் தேர்தலை சந்திப்பது என அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024, நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் இரவு, பகல் பாராது கண்துஞ்சாது கடமையாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும்; கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும், பல்வேறு அமைப்புகளைத் தாங்கிய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும்; வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இந்த செயற்குழு தனது நெஞ்சார்ந்த நன்றி.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்து, அசைக்க முடியாத அடித்தளத்தை கிராமங்கள் தோறும் அமைத்து மக்களின் மனதில் கழகம் நீக்கமற நிறைந்திருக்கச் செய்தார்.
‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’, ‘உங்களால் நான், உங்களுக்காகவே நான்’ என்று தவ வாழ்வு வாழ்ந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அரை நூற்றாண்டு காலத்திற்கு அதிமுகவை வெற்றிநடை போட வைத்து, எதிரிகளை வீழ்த்தி, கழகத்தை வீரத்தோடும், விவேகத்தோடும் செம்மாந்து திகழ வைத்தார்.
கழகத்தை சூழ்ச்சியால் வீழ்த்தி, சுயநலத்திற்காக கபளீகரம் செய்ய திரைமறைவிலும், வெளிப்படையாகவும் நடைபெற்ற சூழ்ச்சிகளையும், சூதுகளையும் மிகவும் நுணுக்கமாகப் புரிந்துகொண்ட, கழகத் தொண்டர்களின் அன்புக் கட்டளைகளுக்கு ஏற்ப, ‘கொள்கைக்காகவே வாழ்வோம், எதுவந்தாலும் ஏற்போம்’ என்று 2024, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் களம் இறங்கியது அதிமுக. ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அதிமுக.
‘பிடரி சிலிர்த்த சிங்கம்’ போல் தனித்து நின்று, கொள்கைக்காக லட்சிய வேட்கையோடு தலைநிமிர்ந்து நின்றது.
அதிமுக அதிகார பலம் படைத்தவரின் நிழலில், மக்களின் நலன்களையும், மாநிலத்தின் பெருமைகளையும் இழக்காமல், பதவி என்பது எங்களைப் பொறுத்தவரை மக்களுக்குப் பணியாற்ற ஒரு பாதையே தவிர, எல்லா நேரத்திலும் கொள்கைச் சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம் என்பதை இந்தத் தேர்தல் உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறது.
இனி, அதிமுக அவ்வளவுதான் என்று 1980, 2004 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்போதும்; 1996 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் போதும்,ஏன் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவும் நம்மை ஏளனம் செய்தவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை, லட்சியம் கொண்ட கழக உடன்பிறப்புகளுக்கு என்றென்றும் உண்டு.
மெகா கூட்டணி அமைத்து, அரசியலில் புது வியூகத்தை ஏற்படுத்தி, துரோகிகளை தோற்கடித்து, விடியா திமுக அரசை வீழ்த்தி, 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று சூளுரைப்போம்!
அதிமுக மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை, பணிகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இச்செயற்குழு மீண்டும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணி 75 இடங்களைப் பெற்று நாம் யார் என்பதை இந்த உலகுக்குக் காட்டினோம். அதே போல, 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது.
கழகத்தின் வெற்றிக்காக அல்லும், பகலும் பாராது தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு அயராது உழைத்திட்ட பொதுச் செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டுள்ள செயற்குழு, எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலில் 2026 பேர்வைத் தேர்தலை சந்திப்பது. உள்ளாட்சி, பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம், கூட்டணி குறித்து இபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்புக்காக ஓபிஎஸ், சசிகலா குரல் கொடுத்து வந்த நிலையில் அதிமுக அவசர செயற்குழுவில் மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...