
ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பினை விரும்புவதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்துக்கு அண்மையில் நிறைவடைந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமைந்தது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை கேப்டனாக வழிநடத்திய ஸ்டீவ் ஸ்மித், அந்த அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அவர் 336 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக வலம் வந்தார். மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 148.67 ஆகும்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பினை விரும்புவதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதை உண்மையில் விரும்புகிறேன். ஐபிஎல் ஏலத்தில் எனது பெயரை பதிவு செய்வேன். என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம் என்றார்.
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறவில்லை. ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த இரண்டு டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியிலும் ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்படவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடர்களில் விளையாடவில்லை. கடந்த இரண்டு முறை நடைபெற்ற ஐபிஎல் ஏலங்களிலும் அவர் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.