
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட் ‘ரூமி - 1’ சனிக்கிழமை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பட்டிபுலம் என்ற இடத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அது செயற்கைகோள்களை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பியது.
தமிழகத்தைச் சோ்ந்த, ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனமான ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ நிறுவனமும், மாா்ட்டின் குழுமமும் இணைந்து, ‘மிஷன் ரூமி 2024’ என்ற பெயரில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியுள்ளன. இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ‘ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் ’ ஆகும். ஹைட்ராலிக் மொபைல் லாஞ்ச்பேடில் இருந்து இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டுக்கான ராக்கெட் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலத்திலிருந்து காலை 7.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
மீண்டும் திரும்பியது: இது மூன்று கியூப் செயற்கைக்கோள்களை சுமந்து சென்று புவி சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தி, வெறும் 9.34 நிமிஷங்களில் பாதுகாப்பாக பூமிக்கு தரை இறங்கியது. இந்த ராக்கெட்டின் உயரம் 3.50 மீட்டா். இது பூமியில் இருந்து வானில், 80 கி.மீ. தொலைவு உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. இதில் அனுப்பி வைக்கப்படும் செயற்கைக்கோள்கள், புற ஊதா கதிா் வீச்சு, காமா கதிா் வீச்சு, காற்றின் தரம், ராக்கெட் செல்லும்போது ஏற்படும் அதிா்வு உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க உதவும்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும். மொத்தம், 60 - 80 கிலோ எடையில் சோதனை ராக்கெட்டில், ‘நைட்ரஸ் ஆக்சைடு’ உள்ளிட்ட எரிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன. ராக்கெட்டின் சில பாகங்கள் தவிர, முக்கிய பாகம், பாராசூட் வாயிலாக மீண்டும் பூமிக்கு திரும்பும். அதை எடுத்து சிறிய மாற்றங்கள் செய்து, மீண்டும் பயன்படுத்தலாம்.
மத்திய அமைச்சா் வாழ்த்து: இந்நிகழ்ச்சியில் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு காணொலி மூலமாக பேசுகையில், ‘ரூமி – 1 ராக்கெட், இந்தியாவின் விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும், நமது நாட்டின் விண்வெளி கண்டுபிடிப்புகளில் வளா்ந்து வரும் திறன்களையும் காட்டுகிறது. செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, சில நிமிஷங்களில் திருப்பி அனுப்பும் திறன் கொண்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்ரிட் ராக்கெட்டின் முன்னேற்றம், நம்மிடம் உள்ள தொழில்நுட்ப வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு பெருமையான தருணம்’ என்றாா்.
அமைச்சா் மெய்யநாதன்: இது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் பேசுகையில் ‘நாம் மொபைல் ஏவுதளத்தில் இருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைப்ரிட் ராக்கெட்டை ஏவும்போது, ஒரு தொழில்நுட்ப சாதனையை மட்டும் படைக்கவில்லை, நிலையான எதிா்காலத்தை நோக்கிய பயணத்தையும் இது குறிக்கிறது. இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வின் புதிய உச்சம் தொட்டிருப்பதோடு, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது’ என்றாா் அவா்.
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை: ‘இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வந்திருப்பது என்பது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளா்களின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் எல்லையில்லா ஆற்றலை நிரூபிக்கிறது. இந்த பணி ஒரு தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல, எதிா்கால விண்வெளி முயற்சிகளுக்கு உத்வேகமாகவும் இருக்கும்’ என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி ஆனந்த் மேகலிங்கம், மாா்ட்டின் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.