
விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் சனிக்கிழமை சுடுமண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் 3,254 பொருள்கள் கண்டறியப்பட்டு, அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டது.
இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட அகழாய்வில் மட்டும் 984 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த அகழ்வாராய்ச்சியில், கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, சுடுமண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவ பொம்மை கண்டறியப்பட்டது. இதுவரை வெம்பக்கோட்டையில் 15-க்கும் மேற்பட்ட திமிலுடைய காளையின் உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளது.
தன்மூலம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிய வருவதாகவும், அகழாய்வில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்து வருவதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.