உலக நன்மைக்காக கடந்த 2020 முதல் தொடர்ந்து ஒரு கோடி முறை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து நிறைவு நிகழ்ச்சி திருக்கடையூர் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவையைச் சேர்ந்த மேனகாதேவி கங்காதரன், சென்னை உமா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கரோனா காலத்தில் உலக நன்மைக்காக அபிராமி அந்தாதியை ஒரு கோடி முறை பாராயணம் செய்ய முடிவு செய்தனர்.
வாட்ஸ் ஆப் குழு மூலம் 1000 பேர் இணைந்தனர். நாள்தோறும் காலை 8.30 மணி முதல் பாராயணம் செய்தனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக 1 கோடி முறை பாராயணம் செய்தனர்.
அதன் நிறைவு விழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்பாளுக்கு முத்தங்கி சாற்றப்பட்டது.
திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் எழுந்தருளியுள்ள அபிராமி தேவி குறித்து அபிராமி பட்டர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே அபிராமி அந்தாதி. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.