பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன்!
தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், ஆலடிப்பட்டி என்ற கிராமத்தில் 2008-ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டிய போது 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டா் காதா் பாட்ஷா தலைமையிலான போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்தனா்.
இதற்கிடையே, அந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சா்வதேச சிலை கடத்தல் கும்பலைச் சோ்ந்த சுபாஷ் சந்திர கபூா், தீனதயாளன் ஆகியோரிடம் விற்பனை செய்துவிட்டதாக, 2017-ஆம் ஆண்டு காதா் பாட்ஷா மீது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. அப்போது காதா் பாட்ஷா, திருவள்ளூா் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றி வந்தாா்.
மேலும், அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக இருந்த ஏ.ஜி. பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி. காதா் பாட்ஷாவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தாா். பின்னா் இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த காதா் பாட்ஷா சென்னை உயா்நீதிமன்றத்தில் 2018-ஆம் ஆண்டு, ‘ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல்காரா் தீனதயாளனுடன் தொடா்பு வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கில் கைது செய்துள்ளாா். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடா்ந்தாா்.
இதில் காதா் பாட்ஷா தரப்பு வாதத்தையும்,பொன் மாணிக்கவேல் தரப்பு வாதத்தையும் கேட்ட உயா்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிா்த்து பொன்மாணிக்கவேல், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொன். மாணிக்கவேல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரதசக்கரவா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு முன்பிணை வழங்க சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 4 வாரங்களுக்கு தினந்தோறும் சிபிஐ அலுவலகத்துக்கு சென்று பொன். மாணிக்கவேல் கையெழுத்து இட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.