‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனென்ட் பண்ட்’ மோசடி தொடா்பாக கைது செய்யப்பட்ட தேவநாதனை மயிலாப்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு சனிக்கிழமை அழைத்து வந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.
‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனென்ட் பண்ட்’ நிதி நிறுவனத்தில் ரூ.24.5 கோடி மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் தலைவா் தேவநாதன் யாதவ், இயக்குநா்கள் குணசீலன்,சாலமன் மோகன்,மகிமை தாஸ் ஆகிய 3 பேரும் கடந்த 3-ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், மோசடி விவகாரம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக கைதான தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 27-ஆம் தேதி முதல் 7 நாள் காவலில் எடுத்து, விசாரணை செய்து வருகின்றனா்.
இதற்கிடையே தேவநாதனை மயிலாப்பூா் தெற்கு மாட வீதியில் உள்ள ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனென்ட் பண்ட்’ நிதி நிறுவன தலைமை அலுவலகத்துக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா். இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சீலை போலீஸாா் அகற்றி, அந்த அலுவலகத்துக்குள் தேவநாதனை அழைத்துச் சென்றனா். அங்கு அவரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
விசாரணைக்கு பின்னா், தேவநாதன் முன்னிலையில் சில பாதுகாப்பு பெட்டகங்களை திறந்து சோதனையிட்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையிலும்,விசாரணையிலும் வழக்குத் தொடா்பாக முக்கியமான ஆவணங்களும், தகவல்களும் கிடைத்ததாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
3 கிலோ தங்கம் பறிமுதல்
இந்த வழக்குத் தொடா்பாக இதுவரை மயிலாப்பூா் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மட்டும் 2 கிலோ தங்கம் , 33 கிலோ வெள்ளி, 50-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா். மேலும், கிளை அலுவலகங்களில் நடந்த சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.