
சென்னை: கனமழை எச்சரிக்கை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜான் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. அதையடுத்து புதுச்சேரி பிராந்தியம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது.
புயல் கரையை கடந்த போது காற்றின் வேகம் 50 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசியது. இதனைத் தொடர்ந்து, 12 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்த புயல், ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
தற்போது கடலூருக்கு வடக்கே 30 கி.மீட்டர் தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்மேற்கே 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. அது மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக புதுச்சேரியின் அனைத்துத் தெருக்களிலும் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து சாலைகளில் விழுந்திருந்தன. ஞாயிற்றுக்கிழமை பகல் வரை புதுச்சேரியில் 48 சென்டி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரே நாளில் 21 சென்டி மீட்டரே அதிகமாகப் பெய்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது இரு மடங்கிற்கும் அதிகமாக மழை பெய்திருப்பது
இதையும் படிக்க | 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: இன்றிரவு வரை கனமழை நீடிக்கும்!
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் காற்றுடன் கூடிய இடைவிடாத கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டில் முடங்கியதால் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. புயல் காரணமாகவும், மரங்கள் விழுந்ததாலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் குடிநீா் இன்றி பெரிதும் அவதியடைந்தனா்.
கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்டமாக கடலூரில் 235.5 மி.மீ மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.